மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிப் போகின்றன. இதுதொடர்பான அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக அறியப்படுவது அண்ணா பல்கலைக்கழகம். எத்தனையோ மேதைகளை உருவாக்கித் தந்த இந்தக் கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரி இன்ஜினீயர்களை தயார் செய்கிறது.
1978-ஆம் ஆண்டு, செப்டம்பர் 4-ம் தேதி, சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாகப் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு மிகச்சிறந்த முறையில் வெற்றி நடை போட்டு வருகிறது.

தலைநகர் சென்னையில் பெருமையுற அமைந்துள்ள இந்த அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தலைநிமிர்ந்து நிற்கிறது. 1978-ம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு அசத்தல் சாதனைகளைப் புரிந்து வருகிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் எழிலுற அமைந்து உள்ளன.
நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இந்த பல்கலைக்கழகம் 10-வது இடத்தில் உள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாம், புகழ்பெற்ற தமிழ் நகைச்சுவை நாடக ஆசிரியரும், சினிமா கதையாசிரியரும், நடிகருமான கிரேசி மோகன், பிரபல தமிழ் எழுத்தாளர் சுஜாதா என்று அழைக்கப்படும் ரங்கராஜன், கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்திலுள்ள கணிப்பொறியியல் துறையின் முன்னாள் முதல்வரும், 1994-ம் ஆண்டுக்கான டியூரிங் பரிசை வென்றவருமான ராஜ் ரெட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, இந்தியாவின் முதல் பெண் இன்ஜினீயர் ஏ. லலிதா உள்ளிட்டோர் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த இணைப்புக் கல்லூரிகளில் வரும் ஜூன் மாதம் பொறியியல் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறவிருந்தது. இதற்காக தேர்வு ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து வந்தது.
ஆனால் மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுடன் கல்லூரிகளில் வைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டுள்ளன.
இதனால் மானவர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் சிரமங்கள் ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், தேர்வு நேர பணிகளில் தொய்வு மற்றும் சிக்கல்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணம் கருதி, தற்போது இந்த கல்லூரிகளுக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் வந்து செல்வதற்கு மிகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம், வரும் மே 15 அன்று தொடங்க இருந்த பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இதனால் தேர்வு அட்டவணையும் மாற்றம் பெற்று வெளியிடப்படவுள்ளது.
இதுதொடர்பான இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழக மற்றும் அதன் இணைப்பு பெற்ற தன்னாட்சி அதிகாரம் பெறாத என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












