அப்ளிகேஷன் அடிக்க ஆரம்பித்தது அண்ணா பல்கலை.. மாணவர்கள் சேருவார்களா?

Posted By: Jayanthi

சென்னை: பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக இந்த ஆண்டு 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடும் பணியில் அண்ணா பல்கலைக் கழகம் ஈடுபட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்தன. தற்போது அந்த விடைத்தாள்கள் திருத்தும் பணி மும்முரமாக நடக்கிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

அதற்கு முன்னதாக பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்களை விற்பனை செய்யவும் அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.

ஆஃபர்கள்

பிளஸ் 2 தேர்வு முடிந்துள்ள நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகள் இப்போதே மாணவர்களை இழுப்பதற்காக ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. கவர்ச்சிகரமான பல்வேறு திட்டங்களையும் அறிவித்து மாணவர்களை தங்கள் கல்லூரிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது தவிர தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பில் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்காக தனியாக நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி வருகின்றனர்.

ஆனால் அண்ணா பல்கலைக் கழகம் வழக்கம் போல மே மாதம் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கி ஜூலை மாதம் கவுன்சலிங் நடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

 

1 லட்சம் இடங்கள் காலி

கடந்த ஆண்டு 2 லட்சம் பொறியியல் சேர்க்கை இடங்கள் உள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மாணவர்கள் சேரவில்லை என்பதால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் கடந்த ஆண்டு காலி ஏற்பட்டது.

ஒற்றைச் சாளர முறை

தற்போதுள்ள கணக்குப் படி தமிழகத்தில் 570 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 60 சதவீத இடங்கள் ஒற்றைச் சாளர முறையின் கீழ் நிரப்பப்படும். இவை அனைத்தும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். இந்த இடங்களை நிரப்ப கவுன்சலிங் நடத்தப்பட்டு ஒதுக்கீட்டு உத்தரவுகள் வழங்கப்படும்.

2.50 விண்ணப்பங்கள்

இதையடுத்து இந்த ஆண்டு 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிட அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. இருப்பினும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை இந்த ஆண்டு அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. கிராமப் புற மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது கடினம் என்பதால் அச்சடித்து வெளியாகும் விண்ணப்பங்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்துகிறது.

இந்த ஆண்டு இன்னும் அதிகமிருக்கும்

கடந்த ஆண்டுபோல இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் போடுவார்கள். ஆனால் விரும்பிய இடங்கள் கிடைக்காவிட்டால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டும் காலி இடங்கள் அதிகம் ஏற்படும் என்று தெரிகிறது.

English summary
Anna University is start printing 2.50 lakh application forms for engineering courses.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia