அண்ணா பல்கலைக் கழக தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர திட்டம்

Posted By:

சென்னை: மாணவர்களின் புரிதல் திறனை சோதிக்கும் வகையில் பொறியியல் படிப்புகளின் கேள்வித்தாளை வடிவமைக்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழக தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர திட்டம்

அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும் அனைத்து பாடப் பிரிவுகளிலும் படிக்கும் மாணவர்களின் புரிதல் திறனை சோதிக்கும் வகையில் தேர்வுகளில் சில நடைமுறைகளை செய்ய அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

அத்துடன் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது எடுக்கும் நடவடிக்கைகளிலும் மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.இந்த மாற்றங்களை செய்ய அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் வழங்க வேண்டும். அதனால் ஆட்சி மன்றக் குழுவுக்கு மேற்கண்ட கருத்துகளை பல்கலைக் கழகம் பரிந்துரை செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் சுமார் 2 லட்சம் பொறியியல் மாணவர்கள் படித்து வெளியில் வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து வெளியில் வரும் மாணவர்களுக்கு கூட வேலை வாய்ப்பு சிரமமாக உள்ளது. கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்கும் பல மாணவர்கள் அவதில் தேறுவதே இல்லை.

தமிழ் வழியில் பொறியியல் படித்து வெளியில் வருவோரின் நிலை மிகவும் பரிதாபம். அதனால் மாணவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தவும், தொழில் நுட்பங்களை புரிதலுடன் தெரிந்து கொள்ள வைக்க வேண்டும் என்பதை அண்ணா பல்கலைக் கழகம் இப்போதுதான் உணர்ந்துள்ளது.

இதையடுத்து பல்கலைக் கழகத்தின் சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர்கள் இணைந்து தேர்வுகளில் புதிய நடைமுறைகளை கொண்டு வரும் வகையில் புதிய முறையை உருவாக்கியுள்ளனர்.

இதன்படி தேர்வில் இடம் பெறும் கேள்விகள் பெரும்பாலும் நேரடியான கேள்விகளாக இல்லாமல் மாணவர்கள் தாங்கள் படித்ததை கொண்டு சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் இடம் பெறும். விடைத்தாள்களை திருத்தும் முறைகளையும் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் குறித்து அனைத்து தரப்பு பேராசிரியர்களுடன் விவாதித்த பிறகு இது நடைமுறைக்கு வரும். மேலும் இது குறித்து பேராசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளித்த பிறகே இதை நடைமுறைப்படுத்த முடியும். அத்துடன் பேராசிரியர்களுக்கும் திறன் சோதிக்கும் முறைகளை கொண்டு வருவது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் ஆலோசித்து வருகிறது.

English summary
Anna University is planning to bring new changes in exam systems from coming years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia