பொறியியல் கல்லூரிகளிலும் சிபிசிஎஸ் முறை: அண்ணா பல்கலை கொண்டு வருகிறது

Posted By:

சென்னை, மார்ச் 2: பொறியியல் கல்லூரிகளிலும் விருப்ப பாடத் தேர்வு முறையை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ளது போல பொறியியல் கல்லூரிகளிலும் விருப்ப பாடத் தேர்வு முறையை இந்த ஆண்டில் அண்ணா பல்கலைக் கழகம் கொண்டு வருகிறது.

ஒரு பட்டப்படிப்பில் இடம் பெறும் முக்கிய பாடங்கள் அல்லாமல் துணைப் பாடங்களில் தாங்கள் விரும்பும் பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிப்பதுதான் சாய்ஸ் பேஸ்டு கிரடிட் சிஸ்டம்.

பொறியியல் கல்லூரிகளிலும் சிபிசிஎஸ் முறை: அண்ணா பல்கலை கொண்டு வருகிறது

பல்கலைக் கழக மானியக் குழுவின்(யுஜிசி) வற்புறுத்தலின் பேரில் பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இந்த சிபிசிஎஸ் முறை நடைமுறையில் உள்ளன. இந்த சிபிசிஎஸ் முறைக்கான வழிகாட்டுதல்களை யுஜிசி தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

ஆனால் தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இந்த முறை இன்னும் அமலுக்கு வரவில்லை. ஆனால் சில தனியார் தொழில் நுட்ப கல்லூரிகள் இதை அமல்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் நடந்த அனைத்து மாநில உயர்கல்வி அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் சிபிசிஎஸ் முறையை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் வலியுறுத்தியுள்ளார்.

அதன்பேரில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் இந்த சிபிசிஎஸ் முறையை நடைமுறைப்படுத்த ஆவன செய்து வருகிறது. இதையடுத்து அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இணைந்துள்ள 500 பொறியியல் கல்லூரிகளிலும் இந்த முறை விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

English summary
Anna University is planning to bring CBSC system in Engineering colleges.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia