தொழிற்சாலை பயிற்சியோடு மாணவர்களுக்கு பொறியியல் கல்வி... அண்ணா பல்கலைக்கழகம் அசத்தல்!

Posted By:

சென்னை: தொழிற்சாலைகள் மற்றும் தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, பொறியியல் படிப்புகளில் மாற்றம் கொண்டு வர மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சி திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய திட்டத்திற்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் இரண்டு அல்லது மூன்று தொழிற்சாலைகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். sandwich course (4 ஆண்டுகள் படிப்பு) முறையில் கல்லூரி மூலம் படிப்பறிவும் தொழிற்சாலை மூலம் பட்டறிவும் வழங்கப்பட வேண்டும். தரமான கல்விச்சாலைகள் தொழிற்சாலையில் மாணவர் நேரடி பயிற்சி பெரும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தொழிற்சாலையுடன் இணைக்கப்படாத பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி மறுக்கும் நடைமுறை வரவேண்டும் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்தி வந்தனர்.

இதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது அகில இந்திய கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.யின் உத்தரவு. அனைத்து பல்கலையிலும் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்துறை தேவைகளுக்கு ஏற்ப, பாடத் திட்டங்களை நவீனப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அண்ணா பல்கலையில் வரும் கல்வி ஆண்டில், தொழிற்சாலைகளுடன் இணைந்த பயிற்சி திட்டங்கள் அறிமுகமாகின்றன.

(100 நோஞ்சான்கள் வேண்டாம்.. ஒரே ஒரு ஆரோக்கியமான பிள்ளை போதும்....!)

புத்துணர்வு பயிற்சி

முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கூட்டமைப்புகளுடன் அண்ணா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொள்ளும். தொழிற்சாலை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் புத்துணர்வு பயிற்சி, செய்முறை பயிற்சி மற்றும் புதிய தொழில்நுட்பம் குறித்து பாடங்கள் எடுக்கப்படும்.

தொழிற்சாலைகளில் பயிற்சி

இதேபோல் பொறியியல் மாணவர்களுக்கு தொழிற்சாலையில் நேரடி பயிற்சி தரப்படும். தொழிற்சாலைகளுடன் இணைந்து மாணவர்களுக்கு புதிய செயல் திட்டம் வழங்கப்பட்டு தொழிற்சாலைகளை மாணவர்கள் நேரடியாக பார்வையிடலாம். படித்து முடித்த பின், அவர் பயிற்சி எடுத்த தொழிற்சாலையிலேயே வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

பாடத்திட்டத்தில் மாற்றம்

தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கேற்ப தொழிற்சாலையின் தேவைக்கேற்ப புதிய படிப்பு மற்றும் பாடங்கள் கொண்டு வரப்படும். புதிய தொழில்நுட்ப பாடங்கள் உடனே தேவைப்பட்டால் தொழிற்சாலை மற்றும் பல்கலை வல்லுனர் குழு ஆலோசித்து, தேவையான மாற்றங்களை பாடத்திட்டத்தில் உடனே கொண்டு வரும்.

சிறப்பு பயிலரங்கம்

தொழிற்சாலை பொறியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்து சிறப்பு பயிலரங்கம் நடத்தப்படும்.

தொழிற்துறை வளர்ச்சிக்கு ஏற்ப, தொழிற்சாலைகளுடன் இணைந்து பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு ஆராய்ச்சிகள் வழங்கப்படும்.

 

குறுகிய கால பயிற்சி வகுப்பு

பல்கலை ஆசிரியர்களை தொழிற்சாலைக்கு வரவழைத்து, புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வைப்பது மற்றும் தொழிற்சாலை பயிற்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களை பல்கலைக்கழகத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு குறுகிய கால பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்

நேற்று முதல் இத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய விரும்பும் தொழிற்சாலைகளுக்கான பதிவுகள் துவங்கியுள்ளன. வரும், ஜூன், 8ஆம் தேதி வரை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, பின் இரு தரப்பிலும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உண்மையான பொறியாளர்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த புதிய திட்டத்திற்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பொறியியல் படிப்பு முடித்துள்ள மாணவர்களில் எழுபது சதவிகிதம் பேர் தொழில் நுட்பம் சார்ந்த வேலை செய்ய திறனற்றவர்களாக இருக்கிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இந்த புதிய கல்வி முறையின் மூலம் தொழில்நுட்பம் அறிந்த பொறியியல் மாணவர்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

English summary
Anna University has planned to introduce industry based training to the students of engineering studies.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia