பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் – நாளை முதல் விநியோகம்

Posted By:

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் 7 ஆம் தேதி வெளிவருவதையொட்டி பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் நாளை முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 570க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2 லட்சம் பி.இ, பி.டெக் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.

பொறியியல் படிப்புகளில் தான் மாணவர்கள் அதிகளவு சேருகிறார்கள். அதனால் 2 லட்சத்து 40 ஆயிரம் படிவங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் – நாளை முதல் விநியோகம்

தமிழகம் முழுவதும் 60 மையங்களில் நாளை முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகின்றன. விற்பனை மையங்கள் மற்றும் முகவரி விவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2015) வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பிராட்வே பாரதி அரசு மகளிர் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. ஆகிய 4 மையங்களில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூபாய் 250.

அனைத்து மையங்களிலும் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தவிர காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பம் விற்பனை செய்யப்படும்.

தபால் மூலம் விண்ணப்பம் பெறுவதற்கு கட்டணம் ரூபாய் 700. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூபாய் 450. விண்ணப்ப கட்டணத்தை The Secretary, Tamil Nadu Engineering admissions என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க டிமாண்ட் டிராப்ட் எடுத்து, செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-600 025 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் மே 27 ஆம் தேதி வரை வினியோகிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 29 ஆம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மே 29 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களின் வசதிக்காக கடந்த வருடம் எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் எந்த பாடப் பிரிவுகளில் எவ்வளவு கட்-அப் மார்க் என்ற பட்டியல் 8 ஆம் தேதி இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.

இது தவிர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ், வெளி மாநிலத்தில் பிளஸ்-2 படித்த மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ‘‘நேட்டி விட்டி'' சான்றிதழை முன்கூட்டியே பெற வசதியாக அதன் மாதிரியை அண்ணா பல்கலைக்கழகம் இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது.

English summary
For those waiting for the engineering admission window to open, here is good news. Anna University has announced that it will start issuing application forms for BE/BTech courses from the first week of May.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia