நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனாவினால், தமிழகத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தில் சென்னையிலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்ணா பல்கலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அப்பல்கலைக் கழகம் எப்படி இருக்குன்னு தெரியுமா?
தேர்வுகள் ஒத்திவைப்பு
கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல் நிலவி வரும் நிலையில், பெரும்பாலான கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் தேர்வுகள்
கடந்த வாரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், பொறியியல் கல்லூரி தேர்வுகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளிவராமல் உள்ளது.
யுஜிசி அறிவுரை
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி, ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எனவே, இத்தேர்வுகளை நடத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலையின் முடிவு
பொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என அண்ணா பல்கலை கூறியுள்ளது. கொரோனோ தீவிரம் குறைந்தபின் அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெற்று தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகம்
பருவத் தேர்வுகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டாலும், மாநிலத்தில் கொரோனாவின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படாமலேயே உள்ளது. குறிப்பாக, சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் அண்ணா பல்கலைத் தேர்வுகள் இப்போதைக்கு நடத்த முடியாத சூழலே உள்ளது.
கொரோனா முகாமாகும் கல்லூரிகள்
சென்னையில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளும் கொரோனா முகாம்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
கொரோனா வார்டான அண்ணா பல்கலை
இதனிடையே, சென்னையில் லட்சக் கணக்கானோர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவமனைகள் இன்றி தற்போது அண்ணா பல்கலைக் கழகம் சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கடிதம்
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியை கொரோனா பரிசோதனை செய்தவர்களைத் தனிமைப்படுத்த பயன்படுத்த ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கடிதம் எழுதியது.
அண்ணா பல்கலை மறுப்பு
மாநகராட்சியின் இந்த கோரிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் மறுத்து விட்டது. மேலும், மாணவர் விடுதியை உடனடியாக காலி செய்ய முடியாது என்றும் மாணவர்களின் பொருட்கள் அதில் இருப்பதாலும், மாணவர்கள் பலர் வெளியூர்களில் இருப்பதால் இரண்டு நாட்களில் ஒப்படைக்க முடியாது என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் கூறியது.
சட்ட ரீதியில் நடவடிக்கை
அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்காத பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்தது. மேலும், ஆராய்ச்சி மாணவர்களின் விடுதியையும் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு 20 ஆம் தேதிக்குள் அதனை ஒப்படைக்கவேண்டும் என்று மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டது.
சிறப்பு சிகிச்சை மையமான பல்கலைக் கழக விடுதி
கடந்த மாதங்களில் கொரோனாவினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.
மாநகராட்சி ஊழியர்களுக்குத் தடை
தற்போது, அண்ணா பல்கலைக் கழகம் மாணவர்களின் ஆரவாரமின்றி தனிமைத் தீவுபோல மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக பிரதான நுழைவு வாயிலில் வர மாநகராட்சி ஊழியர்களுக்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதான நுழைவுவாயிலில் அலுவலர்கள், பேராசிரியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
300 படுக்கைகளுடன் அறிவியல் துறை கட்டிடம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் துறை கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை.யின் அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வழியில் பருவத் தேர்வு
பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வு வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் அவர்களுக்குத் தேர்வு வைக்க வேண்டியதன் அவசியம் கருதி விரைவில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் முறையில் தேர்வை எழுதுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications












