தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் துவங்கப்பட உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 2,000 உபரியாக அடையாளம் காணப்பட்ட ஆசிரியர்களை நியமிக்கும்படி தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளிகள் தாய்மொழியுடன் கூடிய ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனிடையே, தனியார் பள்ளிகளைப் போன்றே தொடக்கப் பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. அதற்கேற்ப அங்கன்வாடி மையங்களை நர்சரி பள்ளிகளாக மாற்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதன், முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மிக அருகில் உள்ள 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களை நர்சரி பள்ளிகளாக மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 58 ஆயிரம் குழந்தைகள் பயனடைவர்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உபரியாக அடையாளம் காணப்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்குப் பணியிட மாற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்துக்கும் மற்றும் தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆசிரியர்கள் அங்கன்வாடி மையங்களில் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவார்கள் என்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications

