திறந்தநிலை, இணையவழி படிப்புகளில் சேருவதற்கு முன்னதாக அந்த கல்வி நிறுவனங்கள் அதற்கான அங்கீகாரத்தை முறையாகப் பெற்றுள்ளதா என்பது குறித்து மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டுமென அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின்(ஏஐசிடிஇ) எச்சரிக்கை செய்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (All India Council for Technical Education - AICTE) என்பது இந்தியாவில் பொறியியல் மற்றும் தொழினுட்பம், மருந்தியல் (Pharmacy),
கட்டுமானக்கலை மற்றும் நகரமைப்பு (Architecture & Town Planning), விடுதி மேலாண்மை மற்றும் உணவுத் தொழினுட்பம் (Hotel Management & Catering Technology), பயன்பாட்டுக் கலை மற்றும் தொழில் (Applied Arts & Crafts), மேலாண்மைக் கல்வி (Management Studies) மற்றும் கணிப்பொறி பயன்பாடு குறித்த தொழிற்கல்விப் பாடங்களுக்கு அனுமதி வழங்கும் தன்னாட்சி அமைப்பாக மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

1945 நவம்பர் மாதம் தொழில்நுட்பக் கல்வி வசதிகள் மற்றும் அவைகளைக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்படியாக ஒருங்கிணைக்கவும் இந்த ஏஐசிடிஇ அமைப்பு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
இன்ஜினியரிங், டெக்னாலஜி, திட்டமிடல், ஹோட்டல் மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், பயன்பாட்டு கலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் திறந்தவெளி, தொலைதூரக் கற்றல் மற்றும் இணைய வழியில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்புகளை வழங்க எந்தவொரு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்தியாவில் அனுமதி கிடையாது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், மேலாண்மை, கணினி பயன்பாடுகள், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, பிளாக் செயின் மற்றும் சுற்றுலா பயணம் ஆகியவற்றில் திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கற்றல், இணையவழியில் மாணவர்களுக்கு கற்றுத்தர முதுநிலை, சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புளுக்கு மட்டும் ஏஐசிடிஇ மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஒப்புதலுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து மாணவர்களும் இத்தகைய படிப்புகளில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு முன்னதாக அதற்கான அங்கீகார அனுமதியை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாடு முழுவதும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் முறையான அங்கீகாரத்தை பெறாமலயே இணையவழியில் பல்வேறு படிப்புகளை கற்றுத் தருவதாக புகார்கள் வந்துள்ளன. அதையொட்டி இந்த அறிவிப்பை ஏஐசிடிஇ தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, மாணவர்கள் இணையவழியாகவும், திறந்தநிலை கல்வி நிறுவனங்கள் வழியாகவும் உயர்கல்வியில் சேரும்போது ஒருமுறைக்கு இரு முறை அந்த நிறுவனம் குறித்து நன்கு அறிந்த பின்னர் சேரவேண்டும் என்று எச்சரிக்கையை ஏஐசிடிஇ விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications












