திருப்பதி, பாலக்காடு ஐஐடி-களில் நடப்பாண்டிலேயே சேர்க்கை!

Posted By:

சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலம் பாலக்காடு ஆகிய நகரங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஐஐடி-க்களில் மொத்தம் 120 இடங்களுக்கு, 2015-16 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறினார்.

திருப்பதி, பாலக்காட்டில் உயர்கல்வி நிறுவனமான ஐஐடி-கள் தொடங்கப்படும் என்று 2014-ம் ஆண்டு பட்ஜெட்டின்போது மத்திய அரசு அறிவித்தது அதன்படி இப்போது அங்கு ஐஐடி அமைக்கும் பணிகள் முடிவடைந்து அங்கு ஐஐடி-கள் தொடங்கப்பட்டு விட்டன. நடப்பாண்டிலேயே அங்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் முதல் அங்கு வகுப்புகள் நடைபெறவுள்ளன. மேலும் இந்த ஐஐடி-க்களுக்கு அடுத்த 6 முதல் 10 மாதங்களில் புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதுவரை அவற்றுக்கான வழிகாட்டி இயக்குநராக சென்னை ஐஐடி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பதி, பாலக்காடு ஐஐடி-களில் நடப்பாண்டிலேயே சேர்க்கை!

இதுதொடர்பாக பாஸ்கர் ராமமூர்த்தி கூறியதாவது:

இந்தப் புதிய ஐஐடி-க்களுக்கு இயக்குநர்கள் நியமிக்கப்படுகிற வரை, சென்னை ஐஐடி-தான் அவற்றை வழிநடத்தும். இதற்கான அதிகாரம் சென்னை ஐஐடி-க்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவரை திருப்பதி ஐஐடி-க்கு பொறுப்பு பேராசிரியராக கே.என். சத்தியநாராயணாவும், பாலக்காடு ஐஐடி-க்கு பொறுப்பு பேராசிரியராக பி.பி.சுனில் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு ஐஐடி-க்களிலும் சிவில், கணினி அறிவியல், மின்னியல், இயந்திரவியல் ஆகிய 4 பி.டெக். துறைகளின் கீழ் தலா 30 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதன்மூலம் மொத்தம் 120 இடங்கள் கிடைக்கும்.

வகுப்புகளை நடத்த சென்னை ஐஐடி-யிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள் ஆகியவையும் தயார் நிலையில் உள்ளன.

மாணவர்கள் ஜூன் 25 முதல் ஐஐடி-யில் சேருவதற்காக ஆன்-லைனில் படிவங்களை நிரப்பும்போது பாலக்காடு ஐஐடி, திருப்பதி ஐஐடி-க்களையும் விருப்பமாகத் தேர்வு செய்யலாம். இந்த இரு ஐஐடி-க்களிலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என்றார் அவர்.

English summary
Admission has been started in Tirupathi, Palakkad IITs for the academic year or 2015-2016. Chennai IIT will be incharge of Tirupathi, Palakkad IITs, Chennai IIT Director Mr. Baskar Ramamurthy told to the press yesterday.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia