சென்னை: பொறியியல் பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் மூன்றே நாளில் 9,170 பேருக்கு சேர்க்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகம்..
கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் இந்த ஆண்டும் சிறப்பாக செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் முதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.
விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள்
தொடக்கத்தில் விளையாட்டுப் பிரிவினருக்கும், அதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கும் கவுன்சிலிங் நடைபெற்றது.
பொதுப் பிரிவு
அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. பொதுப் பிரிவின் கீழ் மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 75 பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன.
முதல் 2 நாட்களில் 4,820 பேர்
முதல் 2 நாட்கள் முடிவில் 4,820 மாணவ, மாணவிகள் கவுன்சிலிங்கில் பங்கேற்று சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். இது மூன்றாம் நாள் முடிவில் 9,170-ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 4,290 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக் கடிதங்களை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
இசிஇ பிரிவுக்கு கிராக்கி
கவுன்சிலிங் தொடங்கி மூன்று நாள்கள் முடிந்துள்ள நிலையில் இசிஇ பாடப் பிரிவையே அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். 1,873 பேர் இந்தப் பிரிவையும், 1,557 பேர் மெக்கானிக்கல் பிரிவையும், 1,195 பேர் சிஎஸ்இ பிரிவையும், 1,030 பேர் இஇஇ பிரிவையும், 826 பேர் சிவில் பிரிவையும் தேர்வு செய்திருக்கின்றனர்.
1,83,905 இடங்கள் காலி
கவுன்சிலிங் தொடங்கி 3 நாள்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் 1 லட்சத்து 83 ஆயிரத்து 905 பி.இ,, பி.டெக் இடங்கள் காலியாக உள்ளன. ஜூலை 28 வரை தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications












