எங்களை ஏன் இன்டர்வியூவுக்கு கூப்பிடலை...? - ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிராக போராட்டம்

Posted By: Jayanthi

சென்னை: கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை நியமனப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள நிலையில், 65 பேருக்கு மீண்டும் நேற்று சான்று சரிபார்ப்பு நடந்தது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் புதிய நபர்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை சான்று சரிபார்ப்பு நடத்தியது. அதில் மதிப்பெண் கணக்கிட்டு இன சுழற்சி முறையின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் நேர் முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடந்தது. நேர்முகத் தேர்வில் 81 பேர் வெற்றி பெற்றனர். அவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணைய தளத்தில் வெளியிட்டது.

மேற்கண்ட நியமனத்துக்கான சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டு தகுதி பெற்றவர்களில் 65 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. இதையடுத்து மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் முதுநிலை பட்டதாரி ஒருவர் தொடர்ந்த வழக்கில் மீண்டும் அவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி நேற்று காலை முதல் மாலை வரை சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள டிபிஐ வளாத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மேற்கண்ட 65 பேருக்கும் மீண்டும் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

இது குறித்து சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், முதுநிலை பட்டம் நேரடி படிப்பில் பெற்றுள்ளதாகவும், பி.எட் பட்டம் தொலைநிலைக் கல்வி மூலம் பெற்றதாகவும், கூறி எங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் புறக்கணித்துள்ளது. அதற்காக நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். இப்போது பள்ளிக்கல்வித்துறை எங்கள் சான்றுகளை சரிபார்க்கின்றனர் என்று தெரிவித்தனர்.

இந்த பிரச்னை குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, முதுநிலைப் பட்டம் நேரடியாக படித்த ஆண்டில் சிலர் பி.எட் பட்டங்களையும் பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களை எப்படி பெற முடியும் என்ற கேள்வி எழுகிறது. மேலும், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த சிலர் இறுதி ஆண்டு முடிக்கின்ற நிலையில் தற்காலிக சான்று வாங்கி வந்து சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டனர். அதனால் அவர்களுக்கு மட்டும் பணி நியமன பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கி வைத்துள்ளோம் என்றனர். ஆனால் மேற்கண்ட 65 பேரும் இதற்காக போராடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

English summary
65 candidates who haven't called for asst professor post interview announced their protest against TRB.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia