4.48 லட்சம் பேர் எழுதிய குரூப்-2 தேர்வு: 2 மாதத்தில் முடிவு-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!!

Posted By:

சென்னை: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்- 2 முதல் நிலைத் தேர்வில் 4.48 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தத் தேர்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்(டிஎன்பிஎஸ்சி) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குரூப்2 பணியிடங்கள் என்ன...

தமிழகத்தில் குரூப்- 2 தொகுதியில் வணிக வரித் துறை இணை அதிகாரி (8 காலியிடங்கள்), சார் பதிவாளர் (23 காலியிடங்கள்), தொழிலாளர் நலத் துறையின் உதவி ஆய்வாளர், உதவிப் பிரிவு அலுவலர் என மொத்தம் 1,241 காலியிடங்கள் உள்ளன.

3 நிலைத் தேர்வு

இதைத் தொடர்ந்து இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசின் ஒப்புதலை டிஎன்பிஎஸ்சி பெற்றது.

இதையடுத்து இந்தப் பணியிடங்களுக்கான தேர்வை மூன்று நிலைகளில் டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் முடிவில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

6.20 லட்சம் பேர் விண்ணப்பம்

இந்தத் தேர்வு அறிவிக்கப்பட்டதும் லட்சக்கணக்கானோர் இந்த விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இதில், முதல் நிலைத் தேர்வு எழுதுவதற்காக 6,20,020 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

2,094 மையங்கள்

இவர்களுக்காக 114 இடங்களில் மொத்தம் 2,094 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

விண்ணப்பித்திருந்தவர்களில் 77 சதவீதம் பேர் (4,48,782 பேர்) தேர்வு எழுதியதாக, அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்து தேர்வுகளை எழுதினர். அனைத்து மையங்களிலும் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் தேர்வுகள் நடந்து முடிந்தன.

 

கண்காணிப்பு

தேர்வுகள் முழு கண்காணிப்புடன் நடைபெற்றன. இந்தத் தேர்வில் எந்தப் பிரச்னையும் வந்து விடக்கூடாது என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தத் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் தேர்வுக் கண்காணிப்புப் பணிகளில் 50,000 பேர் ஈடுபட்டனர்.

சாந்தோமில்...

இந்தத் தேர்வுப் பணிகளை, சென்னை சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

2 மாதங்களில் முடிவு

பின்னர் சி. பாலசுப்பிரமணியன் கூ றியதாவது:

குரூப்- 2 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியிடப்படும். இதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். அதன்பிறகு, பிரதானத் தேர்வுக்கான தேதியை அறிவிப்போம்.

 

குரூப்-1 தேர்வு

குரூப்- 1 தேர்வுக்கு இதுவரை 60,944 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 9 ஆகும்.

சுகாதாரத் துறையின் கீழ் உள்ள மகப்பேறு குழந்தைகள் நல அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு முதல்முறையாகத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 81 காலிப் பணியிடங்கள் உள்ளன என்றார் பாலசுப்பிரமணியன்.

 

English summary
TNPSC has conducted Group-2 exams in Tamilnadu yesterday. More than 4.48 lakh students has written the exams.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia