தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் 250 தனியார் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் அப்பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகின்றன. ஆனால், சில பள்ளிகள் இவ்வாறான அங்கீகாரம் பெறாமலேயே செயல்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சார்பில் அங்கிகாரம் பெறாத பள்ளிகளைக் கணக்கிடும் பணி நடைபெற்றது. இதில், அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த 2 ஆயிரம் பள்ளிகளில் 1,750 மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து உரிய அங்கீகாரம் பெற்றுள்ளன.
ஆனால், 250 பள்ளிகள் அங்கீகாரத்திற்கான விண்ணப்பத்தினை கோராமலேயே இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை அங்கீகாரம் பெற்றுள்ள 1,750 பள்ளிகளுக்கும் 2020 மே 31 வரை தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்கப்பட்டு நிலையில் தொடா் அங்கீகாரம் நீட்டிப்பு கேட்டு பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
இவற்றில் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் பள்ளிகள் விண்ணப்பிக்காமலிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும், அப்பள்ளிகள் தொடர்ந்து செயல்பட முடியாதவாறு சீல் வைக்கப்படும் எனவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.