நடப்பு கல்வி ஆண்டில் 210 நாட்கள் பள்ளிகள் இயங்கும்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

Posted By:

சென்னை : பள்ளிகளுக்கான நடப்பு (2017-2018) ஆண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் நடப்பு கல்வி ஆண்டில் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்றும், மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி இயங்கும் நாட்கள் நடப்பு ஆண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான நடப்பு ஆண்டு செயல் திட்டத்தை (2017-2018) தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 7ந் தேதி பள்ளிகள் திறந்தது. முதல் கல்வி ஆண்டு முடியும் வரை எத்தனை நாட்கள் பள்ளிகள் இயங்கும்? என்னென்ன நாட்களில் விடுமுறை? தேர்வு எப்போது? அந்தந்த மாதங்களில் பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன? ஆகியவை குறித்து அதில் இடம்பெற்றுள்ளது.

காலாண்டுத் தேர்வு விடுமுறை

அதே போல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்தெந்த தேதியில் தேர்வுகள் நடைபெறும்? என்பது அடங்கிய தேர்வு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதன் படி, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பருவத்தேர்வும், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வும் செப்டம்பர் 11ந் தேதி தொடங்குகிறது. தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு செப்டம்பர் மாதம் 18ந் தேதி தொடங்குகிறது. இவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை செப்டம்பர் 24ந் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 3ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

அரையாண்டுத் தேர்வு விடுமுறை

இதேபோல், உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தேர்வும், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வும் டிசம்பர் 11ந் தேதி தொடங்குகிறது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தேர்வு டிசம்பர் 18ந் தேதி தொடங்குகிறது. இவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24ந் தேதி தொடங்குகிறது. ஜனவரி 2ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு

அதைத் தொர்ந்து 12ம் வகுப்புக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 6ந் தேதியும், 10ம் வகுப்புக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 19ந் தேதியும், நடைபெறுகிறது. அதன்பின்னர், 12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மார்ச் 1ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ந் தேதி முடிவடைகிறது. 11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மார்ச் 7ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 16ந் தேதி நிறைவடைகிறது. 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மார்ச் 16ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ந் தேதி நிறைவு பெறுகிறது.

கோடை விடுமுறை

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 9ந் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 30ந் தேதி பள்ளி நிறைவு நாளாகவும், மே1ந் தேதி தொடங்கி, 31ந் தேதி வரை கோடை விடுமுறையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்கள் 210 என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

English summary
Annual Action Plan for Schools (2017-2018) is published. In the current academic year, 210 days schools will be functional.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia