தமிழகத்தின் பெருமைமிக்க உயர்கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய 2 படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக அறியப்படுவது அண்ணா பல்கலைக்கழகம். எத்தனையோ மேதைகளை உருவாக்கித் தந்த இந்தக் கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரி இன்ஜினீயர்களை தயார் செய்கிறது.

1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4-ம் தேதி, சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாகப் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது.
தலைநகர் சென்னையில் பெருமையுற அமைந்துள்ள இந்த அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தலைநிமிர்ந்து நிற்கிறது.
1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு அசத்தி வருகிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் எழிலுற அமைந்து உள்ளன.
நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இந்த பல்கலைக்கழகம் 10-வது இடத்தில் உள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாம், புகழ்பெற்ற தமிழ் நகைச்சுவை நாடக ஆசிரியரும், சினிமா கதையாசிரியரும், நடிகருமான கிரேசி மோகன், பிரபல தமிழ் எழுத்தாளர் சுஜாதா என்று அழைக்கப்படும் ரங்கராஜன், கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்திலுள்ள கணிப்பொறியியல் துறையின் முன்னாள் முதல்வரும், 1994ம் ஆண்டுக்கான டியூரிங் பரிசை வென்றவருமான ராஜ்
ரெட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, இந்தியாவின் முதல் பெண் இன்ஜினீயர் ஏ. லலிதா உள்ளிட்டோர் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் 2 புதிய திறன் மேம்பாட்டு பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. அவை B.voc logistics management, B.voc Footware manufacturing ஆகியவை ஆகும்.
முதல்கட்டமாக குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டும் இந்த பாடப்பிரிவுகளை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஆரணி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் B.voc Footware manufacturing பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்படுகிறது. அந்தக் கல்லூரியில் இந்தப் படிப்பை மாணவர்கள் தேர்வு செய்து படிக்க முடியும்.
இதேபோல், காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் B.voc logistics management பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்படும். இந்த 2 புதிய பாடப்பிரிவுகளும் நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும்.
இதில் 40 மாணவர்கள் வரை சேரலாம் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
வழக்கமான பி.இ படிப்புகளை காட்டிலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2 பாடப்பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது இன்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது. பொறியியல் படிக்கும் மாணவர்கள் வெறும் ஏட்டுக் கல்வியுடன் நிறுத்திக் கொள்ளாமல் போதிய அளவில் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












