சென்னை : தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு நேற்று 9.,30 மணியளவில் தொடங்கியது. தமிழ் முதல் தாள் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வினை தனித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களும் எழுதினார்கள். 24 வயதுடைய ராஜா என்பவர் தனித் தேர்வராக பத்தாம் வகுப்புத் தேர்விற்காக விண்ணப்பித்துள்ளார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம் என்ற இடத்தைச் சேர்ந்தவர்.

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் ராஜாவுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வு மையத்திற்கு ராஜாவுக்குப் பதிலாக அவருடைய உறவினரான 19 வயதுடைய சதீஷ் என்பவர் தேர்வு எழுதுவதற்கு சென்றுள்ளார். தேர்வு அறை மேற்பார்வையாளருக்கு அனுமதிச் சீட்டைப் பார்த்த உடன் சதீஷ் மேல் சந்தேகம் எழும்பியது.
அனுமதிச் சீட்டில் இருக்கும் புகைப்படமும் தேர்வு எழுத வந்தவரின் தோற்றமும் வித்தியாசமாக இருப்பதை கண்ட மேற்பார்வையாளர் உடனே பறக்கும் படைக்கு தகவலை தெரிவிதுள்ளார். மேற்பார்வையாளர் தெரிவித்த சந்தேகத்தின் பேரில் பறக்கும் படையினர் விரைந்து வந்து சோதனை நடத்தினர். சோதனையின் போது சதீஷ் தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வருவது தெரிய வந்தது. ராஜாவுக்குப் பதிலாக சதீஷ் தேர்வு எழுத வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர்.
சதீஷ் தன் உறவினர் ராஜா பல முறை தேர்வு எழுதியும் வெற்றி பெறாததால் தான் அவருக்குப் பதிலாக தேர்வு எழுத வந்ததாகவும் கூறினார். அவர் தன்னுடைய தவறினை ஒப்புக்கொண்டார். கல்வித்துறை அதிகாரிகள் சதீஷை தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பானது கூவத்தூர். தற்போது ஆள் மாறாட்டத்தால் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.


Click it and Unblock the Notifications












