12ம் வகுப்பு பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 3ம் தேதி முதல் பள்ளிகள், தனித் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் 11, 12ம் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (மறுகூட்டல், மறுமதிப்பீடு உள்பட) அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஜூன் 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பெற்றுக் கொள்ளலாம்.
தனித் தனி சான்றிதழ்
11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் 11ம் வகுப்பிற்கான (600 மதிப்பெண்கள்) மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும்.
11 வது பொதுத் தேர்விலோ அல்லது 12-வது பொதுத்தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமே முழுமையாக தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களைப் பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே ஒரு மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும்.
இந்த மாணவர்கள் 11 மற்றும் 12 பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கான மேற்கண்ட இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












