தமிழகத்தில் 2017-18 மற்றும் 2018-19 ஆகிய கல்வியாண்டுகளில் 12ம் வகுப்பில் தோல்வியடைந்த, படிப்பைத் தொடராமல் கைவிட்ட மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கத் தேவையில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ் ராஜ் வா்மா இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நடப்பு கல்வியாண்டில் (2019-2020) 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் இலவச மடிக்கணினி முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது.
கடந்த 2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, அதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் 12ம் வகுப்பு முடித்து தற்போது உயா்கல்வி மேற்கொண்டு வரும் மாணவா்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தோ்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், அல்லது படிப்பை தொடராமல் இருக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கத் தேவையில்லை. மேலும், இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இனி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












