12-ஆம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியரின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் 12 புதிய பாடப் பிரிவுகள் இணைக்கப்பட உள்ளதாகத் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், போலிவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்விக் குழுமத்தின் 14-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது:-
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பயனடையும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் 12-ஆம் வகுப்பு முடித்த பிறகோ அல்லது பட்டப் படிப்பு முடித்த பிறகோ வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் திறன்வளர்ப்பு பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வரும் கல்வியாண்டு முதல் திறன்வளர்ப்பு பயிற்சிக்கான 12 பாடப் பிரிவுகள் இடம் பெற உள்ளன. தற்போதைய நிலையில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவ, மாணவியர்கள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அரசுப் பள்ளிகளில் அதிகரித்துக் கொண்டே வருவதோடு குறையவில்லை. அதேபோல வரும் நடப்பாண்டிலும் ஒவ்வொரு பள்ளியையும் சேர்ந்த ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கிராமங்களுக்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடுத்தகட்டமாகத் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகளில் பன்முக கற்றல் வகுப்பறைகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணி வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


Click it and Unblock the Notifications












