இதுவரை 108 எம்பிபிஎஸ் இடங்கள் காலி... 20 பிடிஎஸ் இடங்களும் நிரம்பவில்லை!!

Posted By:

சென்னை: தமிழகத்தில் இதுவரை எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்புகளில் மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 எம்.பி.பி.எஸ். காலியிடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 95 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்களும் என மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதேபோல சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 20 பி.டி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

முதல் கட்ட கவுன்சிலிங்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கவுன்சிலிங்கில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை நடைபெற்றது.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இந்த கவுன்சிலிங்கை நடத்தி வருகிறது.

 

2,810 மாணவ, மாணவிகள் தேர்வு

முதல் கட்டக் கவுன்சிலிங்கில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 2,939 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2,810 மாணவர்கள் சேர்க்கைக் கடிதம் பெற்றனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலியிடங்கள் ஏதும் இல்லை. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு காலியிடம் உள்பட சில கல்லூரிகளில் சேர்த்து மொத்தம் 13 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

 

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 502 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதையடுத்து சுயநிதி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 95 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

அதாவது, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 3 காலியிடங்கள், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் 16 காலியிடங்கள், மதுராந்தகம் அருகே கற்பகவிநாயகா மருத்துவக் கல்லூரியில் 16 காலியிடங்கள் உள்பட மொத்தம் 95 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

 

 

அரசு பி.டி.எஸ். இடங்கள்

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அதில் உரிய

காலக்கெடுவுக்குள் 65 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதையடுத்து, 20 அரசு பி.டி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.

 

விரைவில் 2-வது கட்ட கவுன்சிலிங்

இதைத் தொடர்ந்து காலியாகவுள்ள காலியிடங்களை நிரப்ப 2-ம் கட்ட கவுன்சிலிங் விரைவில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு விரைவில் வெளியிடும்.

English summary
108 mbbs, bds vacancies has to be filled by Tamilnadu Medical education selecton committee in second phase of counselling.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia