தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு மவுசு வெகுவாகக் கூடி வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு இடங்களில் இளநிலை பொறியியல் பட்டப் படிப்புக்கான கவுன்சிலிங்குக்கு இதுவரை 1.73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் இன்ஜினியரிங் படிப்புகளைப் படிக்க அதிக அளவிலான மாணவர்கள் போட்டியிடுவது தெரியவந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏராளமான இன்ஜினியரிங் கல்லூரிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பி.இ., பி.டெக். போன்ற இளநிலை இன்ஜினியரிங் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்க, ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு (ஜெனரல் கவுன்சிலிங்) மூலம் ஒற்றைச்சாளர (சிங்கிள் வின்டோ) முறையில் நிரப்பப்படுகின்றன. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் சிறந்த முறையில் செய்து வருகிறது.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. 1978-ம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் அமைந்துள்ளன.
மேலும், நாட்டு நிறுவன தரவரிசை கட்டமைப்பு இந்த அண்ணா பல்கலைக்கழகத்தை பத்தாவது இடத்தில் அமர்த்தி இருக்கிறது. மேலும் பல்கலைக்கழகங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் தரவரிசைப்படுத்தி இருக்கிறது.
சென்னை கிண்டி முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகியவை அமைந்துள்ளன.
மேலும், சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகம் குரோம்பேட்டையில் அமைந்துள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-ம் தேதி தொடங்கியது. அதே தேதியில் பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்யத் தொடங்கினர்.
இந்நிலையில் இதுவரை ஒரு லட்சத்து 73,792 மாணவ, மாணவிகள் கவுன்சிலிங்குக்காக பதிவு செய்துள்ளனர்.
அதில் ஒரு லட்சத்து 21,366 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்திவிட்டனர்.
அதேபோல், 81,950 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இன்ஜியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இணைய வசதி இல்லாதவர்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதுகுறித்த சந்தேகம் இருப்பின் 01800-425-0110 எனும் எண் அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications












