சென்னை: பி.இ.படிப்புக்காக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. விண்ணப்பம் செய்ய இன்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மாலை 5 மணி வரை நிலவரப்படி 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கூடலாம் என்று பி.இ. கவுன்சிலிங்கை நடத்தும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட வெகுவாகக் குறைந்துள்ளது. 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் 4-ஆம் வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகத்தை ஏப்ரல் 15-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியது.

நிகழாண்டில் முதல்முறையாக இணையவழி (ஆன்-லைன்) பதிவு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது. படிவத்தைப் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் தங்களது விவரங்களை அதில் பூர்த்தி செய்தி விண்ணப்பிக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறு ஆன்-லைனில் பதிவு செய்ய மே 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். இன்று மாலை 5 மணி வரை 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.
கடந்த 2015-16-ஆம் கல்வியாண்டில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 450 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். கடந்த 2014-15 கல்வியாண்டில் 1.75 லட்சம் பேரும், 2013-14 கல்வியாண்டில் 1.90 லட்சம் பேரும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர். 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் 4-ஆம் வாரத்தில் நடத்த பல்கலைக்கழகம் உத்தேசித்துள்ளது.


Click it and Unblock the Notifications












