கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெறுவதற்காக இதுவரை 1.30 லட்சம் பேர் இணையத்தில் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தையோ அல்லது 14417 என்ற உதவி மைய எண்ணையோ அணுகலாம்.
தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு மாநிலம் முழுவதும் 7,283 தனியார் பள்ளிகளில் சுமார் 85,000 இலவச ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்தத் திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் சேர்க்கை பெறுபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இந்த திட்டத்தின்கீழ், 4.6 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
இதனிடையே வரும் கல்வியாண்டுக்கான (2023-24-ம் ஆண்டு) இலவச மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி தொடங்கி கடந்த திங்கட்கிழமை (மே 20-ம் தேதி) நிறைவடைந்தது.

இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க இதுவரை 1.30 லட்சம் பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு இலவச இடங்கள் ஒதுக்கப்படும்.
ஏதேனும் பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வரும் மே 28-ம் தேதி நடைபெறும் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதைத்தொடர்ந்து இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் அவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.
இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் வருகிற 29-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாகவும் தகவல் அனுப்பப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தையோ அல்லது 14417 என்ற உதவி மைய எண்ணையோ அணுகலாம்.
இவ்வாறு தமிழக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












