அண்ணா பல்கலை. நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 1,200 பேருக்கு வேலை

Posted By:

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு முகாமில் 1,200 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் படிக்கும் மாணவர்களுக்காக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் ஆண்டு ஊதியமாக ரூ. 3.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நிறுவன கூட்டுறவு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அண்ணா பல்கலை. நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 1,200 பேருக்கு வேலை

அண்ணா பல்கலைக்கழகத் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில் அக்ஸன்சர், சிடிஎஸ், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஐபிஎம் ஆகிய 5 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்று, வளாகத் தேர்வுகளை நடத்தின.

முகாமில் 1,500 மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதில் ஒரு சில மாணவர்களுக்கு 3 பணி வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி, 2,122 பணி வாய்ப்புகளை மாணவர்கள் பெற்றனர்.

இதில் குறைந்தபட்சம் ஒரு பணி வாய்ப்பை 1,200 பேர் பெற்றனர்.

இவர்களுக்கு ரூ. 3.5 லட்சம் ஆரம்ப ஆண்டு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழகத் துறைகளுக்கு நடத்தப்படும் இரண்டாம்கட்ட வேலைவாய்ப்பு முகாமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்ட வேலைவாய்ப்பு முகாம், கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இதில், ரூ. 4.5 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையிலான ஆண்டு ஊதியத்தில் 400 மாணவர்கள் பணி வாய்ப்புகளைப் பெற்றனர்.

மூன்றாம் கட்ட வேலைவாய்ப்பு முகாம் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கு துணை நிறுவனங்கள் அழைக்கப்பட உள்ளன. இதில், 500 பேர் வரை பணி வாய்ப்பைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வருகிற டிசம்பர் மாதத்தில் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களை பல்கலைக்கழகம் நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Anna University has arranged the second campus interview recently in Chennai. In this Campus Interview 1,200 has got job offer from various companies.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia