பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு (டிப்ளமோ) படித்தவர்களுக்காக மத்திய அரசு நிறுவனம் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் நிறுவனமான இந்தியன் ரேர் எர்த்ஸ் (ஐஆர்இஎல்) நிறுவனத்தில்தான் தற்போது காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியன் ரேர் எர்த்ஸ் நிறுவனமானது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. முன்பு இந்தியன் ரேர் எர்த்ஸ் நிறுவனம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நிறுவனம் தற்போது ஐஆர்இஎல் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
பூமியில் உள்ள அரிதான உலோகங்களை சுரங்கம் அமைத்து வெளியே கொண்டு வரும் நிறுவனமாகும். பின்பு இந்த உலோகங்களை சுத்திகரித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறது. அரிய உலோகங்களை தோண்டி எடுக்கும் சுரங்கம்,சுத்திகரிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது இந்த நிறுவனம்.
இது சுமார் 10,000 மெட்ரிக் டன் அரிய கனிமங்களை செயலாக்கும் திறனை நிறுவப் பெற்றுள்ளது.
மோசனசைட், லான்தானும், செரியம், நியோடைமியம், பிரசியோடைமியம், சமாரியம், கடோலினியம், இட்ரியம் போன்ற அரிய வகை தனிமங்களை சுரங்கம் அமைத்து வெட்டியெடுக்கிறது இந்நிறுவனம்.
1952-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் முதலில் மோனசைட் கனிமத்தை வெட்டியெடுத்தது. தற்போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுரங்கம் அமைத்து பல்வேறு அரியவகை கனிமங்களை வெட்டியெடுத்து வருகிறது. கேரளாவில் பெரியார் ஆற்றின் கரையில் உள்ள ஆலுவா, ஒடிசா மாநிலம் சத்ரபூர் உள்ளிட்ட இடங்களில் இதன் பிரிவுகள் அமைந்துள்ளன. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சியில் மற்றொரு பிரிவு அமைந்துள்ளது. வெட்டியெடுக்கப்படும் அரிய வகை கனிமங்களில் இருந்து இல்மனைட், ருட்டைல், ஜிர்கான், மோனசைட், சில்லிமனைட், கார்நெட் ஆகிய பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
இந்த நிறுவனத்தில் தற்போது கிராஜூவேட் டிரெய்னி (பைனான்ஸ் 3, எச்.ஆர்., 4), டிப்ளமோ டிரெய்னி 37 (சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், கெமிக்கல்), டிரெய்னி (ஜியாலசிஸ்ட்) 8, டிரெய்னி (கெமிஸ்ட்) 4, என மொத்தம் 56 காலிப் பணி இடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களில் சேர்பதற்கு சிறந்த ஊதியம் உண்டு.
இந்த வேலைவாய்ப்புகளில் சேர்வதற்கு தொடர்புடைய பிரிவுகளில் டிப்ளமோ, டிகிரி படிப்புகளை இளைஞர்கள் முடித்திருக்க வேண்டும்.
மேலும் வயது 14.11.2023 என்ற தேதியின் அடிப்படையில் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு என்ற அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நாகர்கோவில், திருவனந்தபுரம், கொச்சி, புவனேஸ்வர், நாக்பூர், மும்பை ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டியிருக்கும்.
மகளிர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இந்தப் பணியிடங்களுக்கு வரும் 14-ம் தேதிக்குள் (14.11.2023) விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு irel.co.in என்ற இணையதள முகவரியை தொடர்பு கொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












