கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மாணவர்கள் அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும், அரியர் தேர்வை கண்டிப்பாக எழுதித்தான் ஆக வேண்டும் என யுஜிசி உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
மூடப்பட்ட கல்லூரிகள்
நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் இன்றி மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு அதிரடி
மேலும், தமிழகத்தில் கலை-அறிவியல், பொறியியல், எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளில் அரியர் பாடங்களுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது மாணவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
ஏற்க மறுத்த அண்ணா பல்கலை
இதனிடையே, தமிழக அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
உயர்நீதிமன்றம் விசாரணை
இந்த வழக்குகளை குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தாக்கல் செய்த பதில் மனுவில், அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என தெரிவித்திருந்தது.
கால அவகாசம் வேண்டும்
இதனிடையே, இந்த வழக்கானது நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பதில் மனு தாக்கல்
இந்நிலையில், இந்த வழக்கு குறித்தான வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வரவிருந்த நிலையில், பல்கலைக் கழக மானியக் குழுவின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரியர் தேர்வு ரத்து முடியாது
அந்த பதில் மனுவில், கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும், அரியர் தேர்வுகள் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












