தமிழக அரசில் சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ. படித்தவர்கள் பணியாற்ற அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசின் கருவூலம், அக்கவுண்ட்ஸ் பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையான தகுதியான நபர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப் பட்ட ஓர் அரசு சார்ந்த அமைப்பு ஆகும்.
இது நமது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
1929-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் 2 உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பெற்றது. அப்போது இதன் பெயர் தி மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் (The Madras Service Commission) ஆகும்.

மாநில மறுசீரமைப்புக்குப் பின்னர் 1957-ம் ஆண்டில் இது மதராஸ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது.
சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் செய்யப்பட்ட பிறகு இதுவும் தானாகவே "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்" என்று மாற்றப்பட்டு விட்டது.
தேசிய அளவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) செயல்படுவது போல் தமிழக அளவில் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் அல்லது இது போன்ற முதன்மைப் பணிகளுக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யும் பணிகளை டிஎன்பிஎஸ்சி செவ்வனே செய்து வருகிறது.
தற்போது அரசில் சீனியர் ஆபீஸர் (பைனான்ஸ்) 31, மேனேஜர் (பைனான்ஸ்) 13, அக்கவுண்ட் ஆபீஸர் 8 என மொத்தம் 52 இடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி சி.ஏ., அல்லது ஐ.சி.டபிள்யு.ஏ. படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
கணக்கு அலுவலர் நிலை - III பணிக்கு விண்ணப்பிக்க Chartered Accountants (CA) / Cost Accountants (ICWA) படிப்பில் தேர்த்தி பெற்றிருக்க வேண்டும்.
கணக்கு அலுவலர் பணிக்கு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் நிலை மூன்று, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் முதல்நிலை அலுவலர் (நிதி) ஆகிய பணிகளுக்கு C.A., ICWA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பதியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தில் மேலாளர் நிதி பணிக்கு C.A inter / ICWA(CMA) inter தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 10+2 தேர்ச்சி பெற்ற பின் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பணி நியமனத்துக்காக தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் உடற்தகுதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 32-க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.
மேலும், இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும். www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணமாக ரூ. 150, தேர்வுக்கட்டணம் ரூ. 200-ம் செலுத்தவேண்டும்.
விண்ணப்பங்களை வரும் 8.12.2023 -ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இந்தப் பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு tnpsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












