தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. 1,766 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.இதையடுத்து இந்த அறிவிப்புக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்கள் உற்சாக வெள்ளத்தில் திளைக்கின்றனர்.
கூடுதல் விவரங்களுக்கு trb.tn.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு மானியம் பெறும் பள்ளிகளில் பணியாற்ற இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பிதான் ஆண்டுதோறும் ஈடுபட்டு வருகிறது.
ஆசிரியர்கள் நியமனம்
இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது அதிகாரப்பூர்வமாக நடப்பாண்டுக்கான தேர்வு விவரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட தகுந்த வகையில் பல்வேறு பணிகளுக்குமான தேர்வுகள் இந்த நடப்பு ஆண்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பணியிடங்களின் காலியிட விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டு தாள்களுக்கான தேர்வுகளும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டு ஜூலை மாதம் நடத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
உதவி பேராசிரியர்
மேலும் இந்த அறிவிப்போடு, உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் 1,500 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 1766 இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் நடத்துவதற்கான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அட்டவணை விவரம்
ஆசிரியர் தகுதித் தேர்வு, உதவிப் பேராசிரியர் பணி உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்குத் தேர்வு எப்போது என்னும் உத்தேச அட்டவணையையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்.
எப்போது எந்தெந்தத் தேர்வு நடைபெறும்?
1,766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை இந்த மாதமே (ஜனவரி) வெளியாகும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.
அதேபோல அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவர்களுக்கு 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிக்கை 2024 பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிகள்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) முதல் மற்றும் இரண்டாம் நாள் தேர்வு, ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. டெட் தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இதில் அறிவிக்கப்படவில்லை. காலிப் பணியிடங்கள் தொடர்பான எண்ணிக்கை விவரம் பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.
முதுநிலைப் பட்டதாரி உதவியாளர்கள்
அதேபோல், முதுநிலைப் பட்டதாரி உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 200 பணியிடங்களைக் கொண்ட இதற்கான தேர்வு குறித்த அறிவிக்கை மே மாதம் வெளியாகும்.
முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை
சிஎம்ஆர்எஃப் எனப்படும் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் 120 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிக்கை ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
விரிவுரையாளர்கள்
விரிவுரையாளர்கள், இளைய விரிவுரையாளர்கள், மூத்த விரிவுரையாளர்கள் ஆகிய பணிகளுக்கான 139 மொத்த காலிப் பணியிடங்களுக்கு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தகவலையும் டிஆர்பி விரிவாக வெளியிட்டுள்ளது.
அரசு சட்டக் கல்லூரி
மேலும் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 56 காலி பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு, அதாவது 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை 2024ஆம் ஆண்டு நவம்பரில் வெளியாகும்.
இது உத்தேச பணியிடங்கள் மற்றும் தேதிகள் மட்டுமே என்றும் இதில் கூடுதலோ, குறைவோ, மாற்றமோ இருக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தகுதித் தேர்வுடன் போட்டித் தேர்வு
மேலும், ஆசிரியர் பணிக்குத் தேர்வாக விரும்பும் தேர்வர்கள் முதலில் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். தொடர்ந்து அந்தந்த காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் போட்டித் தேர்வையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.
எனினும் இதற்குத் தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சி
இந்த அறிவிப்புகளை டிஆர்பி வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து ஆசிரியர் பணிக்காகக் காத்திருந்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். நீண்ட நாட்களாக இந்த அறிவிப்பை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தற்போது இடைநிலை ஆசிரியர்களில் மட்டும் 1,766 பேர் பணியில் அமர்த்தப்பட உள்ளதால் அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் நீந்தி வருகின்றனர்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு trb.tn.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












