மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் அகில இந்திய சைனிக் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக ஓர் அரிய வாய்ப்பு வந்துள்ளது. 6, 9-ம் வகுப்பில் சேரவிரும்பும் மாணவர்களை இதில் சேர்க்க முடியும். இதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
சைனிக் பள்ளிகள் சங்கம் (SSS) என்பது மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். சைனிக் பள்ளிகள் சங்கம், சைனிக் பள்ளிகளை நடத்துகிறது. சைனிக் பள்ளிகள் என்பது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் (CBSE) இணைக்கப்பட்ட ஆங்கில வழி உறைவிடப் பள்ளிகள் ஆகும்.
சைனிக் பள்ளிகள் தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA), கடக்வாஸ்லா (புனே), இந்திய கடற்படை அகாடமி, எழிமலா மற்றும் அதிகாரிகளுக்கான பிற பயிற்சி அகாடமிகளில் சேர மாணவர்களைத் தயார் செய்கின்றன. தற்போது நாடு முழுவதும் மொத்தம் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன.

இந்த சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் அமைப்பு மூலம் அமைக்கபட்டது. 1961-ம் ஆண்டில் அப்போதைய மத்தியபாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.வி.கிருஷ்ண மேனனால் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது.
இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய ராணுவத்தில் சேருவதற்கு தயார்படுத்துவை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டு அதன்படி செயல்பட்டு வருகின்றன.
தற்போது நாடு முழுவதும் 33 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் அமைந்து சீரிய முறையில் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
ற்போதும் பல்வேறு மாநிலங்களில் மேலும் சில பள்ளிகளை தொடங்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது
இந்தப் பள்ளியில் பயிலும் சிறுவர்களை கல்வி, உடல் மற்றும் உளவியல் ரீதியாக தேசிய பாதுகாப்பு அகாதெமி அல்லது பிற துறைகளில் நுழைவதற்கு தயார்படுத்துவதுதான் இந்த சைனிக் பள்ளியின் நோக்கமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணைக்கு அருகே உள்ளது அமராவதி சைனிக் பள்ளி. இந்தப் பள்ளியானது மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் உண்டு உறைவிடப் (Boarding school) பள்ளியாகும்.
இது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கிலவழிப் பள்ளியாக இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தியாவிலுள்ள 33 சைனிக் பள்ளிகளில் அமராவதி சைனிக் பள்ளியும் ஒன்று.
இதனிடையே, அகில இந்திய சைனிக் பள்ளிகளில் 6, 9-ஆம் வகுப்பு 2024-25 -ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் டிச.16-ஆம் தேதிக்குள் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ஆம் கல்வியாண்டில் 6, 9-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு 2024 ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளம் வழியாக டிச.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
இதற்கு விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.500-ம். இதர பிரிவினர் ரூ.650-ம் இணையவழியில் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து முழுமையான விவரங்களை www.nta.ac.in அல்லது https://exams.nta.ac.in/AISSEE/images/FAQ-Gen.pdf என்ற இணையதள லிங்க்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
தேசியத் தேர்வு முகமை வழங்கிய தரப்பட்டியலின் அடிப்படையில் ஒவ்வொரு சைனிக் பள்ளியின் இணையதளத்திலும் மாணவர் சேர்க்கைக்கு அழைக்கப்படும் மாணவர்கள் பட்டியல் வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம்பெற்றவர்களுக்குப் பள்ளியில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
அதன் பிறகு, மருத்துவப் பரிசோதனையில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மட்டுமே பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












