கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அன்று முதல் பள்ளிகள், கல்லூரிகளும் மூடப்பட்டு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பள்ளிகள் திறப்பு குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று ஊரடங்கு தளர்வு குறித்து மத்திய அரசு வெளியிட்டு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருக்கிறார். அதில், பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து, ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலத்தின் கல்வி நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனத்தை சார்ந்த அமைப்புகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் உருவான கருத்துகளை அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையிலேயே கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.