தெற்கு ரயில்வே மண்டலத்தில் பணிபுரியும் அரிய வாய்ப்பு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குக் கிடைத்துள்ளது.
தெற்கு ரயில்வே மண்டலம் 14 ஏப்ரல் 1951 -ல் நிறுவப்பட்டதாகவும்.

நாட்டின் பழமையான ரயில்வே மண்டலங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது. தெற்கு ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பு நாட்டின் தெற்கு தீபகற்பத்தின் பெரும்பகுதி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சிறிய பகுதிகள் வரை பரவியுள்ளது.
தெற்கு ரயில்வே மண்டலமானது எப்போதுமே, விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து வருகிறது. இந்த மண்டலத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை வரவேற்று அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி கவுரவித்து வருகிறது. மேலும் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் தென்னக ரயில்வே அணிகள் இன்று வரை கோலோச்சி வருகின்றன.

அண்மையில் கூட அகில இந்திய அளவிலான ஆண்கள் அழைப்பு பூப்பந்துப் போட்டியில் தெற்கு ரயில்வே முதல் இடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.செயின்ட் ஜோசப்ஸ் கல்வி குழுமம் சார்பில், ஆறாவது, அகில இந்திய அளவிலான, அழைப்பு ஆண்கள் பூப்பந்து போட்டி, சோழிங்கநல்லுார், செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.அதில், தெற்கு ரயில்வே, தெற்கு மத்திய ரயில்வே, ஐ.சி.எப்., செயின்ட் ஜோசப்ஸ், மேற்கு ரயில்வே அணி, கனரா வங்கி (பெங்களூரு), மத்திய ரயில்வே, கேரளா என, 20 அணிகள் பங்கேற்றன.போட்டிகள் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் முறையில், பகல் மற்றும் ஒளி வெள்ளத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி போட்டியில், தெற்கு மற்றும் மேற்கு ரயில்வே அணிகள் மோதின.அதில், தெற்கு ரயில்வே அணி 29-18, 29-19 என்ற செட் கணக்கில், மேற்கு ரயில்வே அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தடகளம், பாட்மிண்டன், நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், டேபிள் டென்னிஸ், பளுதுாக்குதல், குத்துச்சண்டை, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில் லெவல் 4 & 5 பிரிவில் 5, லெவல் 2 & 3 பிரிவில் 16, லெவல் 1 பிரிவில் 46 என மொத்தம் 67 காலி இடங்கள் தெற்கு ரயில்வேயில் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு சிறந்த ஊதியத்தை தெற்கு ரயில்வே வழங்கும்.
தடகளம், பாட்மிண்டன், நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், டேபிள் டென்னிஸ், பளுதுாக்குதல், குத்துச்சண்டை, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் தேசிய அளவில் பிரகாசித்த வீரர், வீராங்கனைகளுக்கு இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.
இந்த வேலையிடங்களில் லெவல் 1 பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும். லெவல் 2 & 3 பணிக்கு பிளஸ் 2, லெவல் 4 & 5 பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. மேலும் வயது வரம்பானது, 1.1.2024 அடிப்படையில் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விளையாட்டு தகுதியாக தேசிய, சர்வதேச போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 27-ம் தேதிக்குள் இந்தப் பணியிடங்களுக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு iroams.com என்ற இணையதளத்தைத் தொடர்பு கொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












