மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) கீழ் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளில் முனைவா் படிப்புக்கு பிந்தைய மேற்படிப்புகளை தொடங்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மருத்துவத் திறன் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் புதிய ஆராய்ச்சி மேற்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது வரை மருத்துவா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இதுபோன்ற படிப்புகளை மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே தனியாக வழங்கி அங்கீகாரம் அளித்து வந்தன. இந்நிலையில் 'முதுநிலை மருத்துவக் கல்வி பட்டப்படிப்பு விதிகள் 2023-' என்ற புதிய விதிகளை அண்மையில் மத்திய அரசின் உத்தரவின் என்எம்சி வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: மருத்துவ மாணவர்கள் படிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளை தொடங்குவதற்கு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலே அந்தப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக கருதப்படும்.

மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான 'நெக்ஸ்ட்' தோ்வு நடைமுறைக்கு வரும் வரையில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புக்கான சோ்க்கை 'நீட்-முதுநிலை' தோ்வு மூலமே நடைபெறும். முதுநிலை மருத்துவம் பயிலும் அனைத்து மாணவா்களும் முழு நேர மருத்துவா்களாக பணிபுரிய முடியும். அவா்களுக்கு வார விடுமுறையாக ஒரு நாளும் ஆண்டுக்கு 20 நாட்களும் தற்காலிக விடுப்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் என்எம்சியின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் முனைவா் படிப்புக்கு பிந்தைய ஆராய்ச்சி மேற்படிப்புகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு வாரியத்தின் தலைவா் விஜய் ஓசா கூறியிருப்பதாவது:
முதுநிலை மருத்துவப் படிப்பில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பலதரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு முதுநிலை மருத்துவப் படிப்பின் தரத்தை உயா்த்தவும் மருத்துவத்தில் சகோதரத்தன்மையை வலியுறுத்தவும் ஆணையம் முடிவு செய்தே புதிய விதிகள் வகுக்கப்பட்டன.
இதன்மூலம் முதுநிலை மருத்துவம் பயின்ற மாணவா்கள் படிப்பு முடிந்தவுடன் தங்களின் பட்டப்படிப்பை பதிவு செய்வதில் சிக்கல்கள் இருக்காது. அவர்கள் எளிதாக தங்கள் பெயர்களை புதிய படிப்புக்களுக்காகப் பதிவு செய்து தங்கள் மேற்படிப்பைத் தொடரலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
என்எம்சிக்கு அங்கீகாரம்
இந்தியாவில் உள்ள தேசிய மருத்துவ ஆணையத்திற்கு (National Medical Commission -NMC)), மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பானது (World Federation for Medical Education (WFME)), அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.
மேலும் இதன்மூலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உயர்கல்வியை இந்திய மாணவர்கள் மேற்கொள்ள முடியும். இது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 706 மருத்துவ கல்லூரிக்கும் இந்த அங்கீகாரம் பொருந்தும் என்பதால் நாட்டின் எந்த மூலையில் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உயர்கல்வியை பயிலலாம். மேலும், இது நமது நாட்டின் மருத்துவ மாணவர்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருந்தது. மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பு (WFME) என்பது உலகளவில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக இயங்கி வரும் ஒரு உலகளாவிய அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












