நாடு முழுவதும், ஒவ்வோர் ஆண்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்கின்றனர்.
அரசியல் மற்றும் சட்ட ரீதியாக, தமிழ்நாடு உள்பட நாட்டிலுள்ள ஒரு சில மாநிலங்கள் நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகளில், தேசிய மருத்துவ ஆணையம் சிலவற்றை தளர்த்தி, புதன்கிழமை(நவ.22) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய விதி என்னனு தெரியுமா?
பிளஸ் 2 வகுப்பில் உயிரியலை ஒரு பாடமாக எடுத்து படிக்காதவர்களும்கூட மருத்துவப் படிப்பில் சேரலாம் என, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட விதி கூறுகிறது.
இப்போது வரை, இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவக் கல்வி பட்டப் படிப்புக்கான ஒழுங்குமுறைகள் 1997இன் படி, எம்.பி.பி.எஸ்., அல்லது பி.டி.எஸ்., படிக்க, இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்ப பாடங்களை, இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து படித்திருக்க வேண்டும்.
தனித் தேர்வராக அல்லாமல், வழக்கமான பள்ளிக்குச் சென்று, இந்தப் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். கூடுதலாக, ஆங்கிலமும் படித்திருக்க வேண்டும்.

ஆனால், அண்மையில் வெளியாகியுள்ள விதியின் படி, இந்தப் பாடங்களை இரண்டு ஆண்டுகள் படித்திருக்கத் தேவை இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, கூடுதல் பாடமாக இதை எடுத்து படித்து தேர்வு எழுதினால் போதும் என, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவிக்கிறது.
உயிரியல் பாடம் படிக்காமல் மருத்துவரா?
இல்லை என்பதில் நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். உயிரியலை முக்கியப் பாடமாக பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ந்தெடுக்கவில்லை எனினும், மருத்துவப் படிப்பு படிக்கலாம் என்று தான் தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது.
அதாவது, இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் பாடப் பிரிவில் படிப்பவர்களும், உயிரியல் பாடத்தை பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் கூடுதலாகப் படித்து மருத்துவப் படிப்பில் சேரலாம்.
கட்டாய பாடம் எது?
மருத்துவப் படிப்பில் நுழைய இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது பயோ-டெக்னாலஜி எனப்படும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் கட்டாயம். ஆனால், இவற்றை பிளஸ் 2 வகுப்பு சேரும்போதே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய விதிகளில் வாயிலாக அறிய முடிகிறது. இந்தப் பாடங்களுடன் ஆங்கிலமும் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.
புதிய விதி அறிமுகம் என்ன?
மாணவர்கள், தங்கள் விருப்பப்படி பாடங்களை படிக்க, தேசிய கல்வி கொள்கை சுதந்திரம் வழங்குகிறது. அதன் அடிப்படையில், விரிவான விவாதங்களுக்குப் பிறகு, இந்த புதிய நெறிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேசிய மருத்துவ ஆணைய ஆலோசனை கூட்டத்தில், புதிய மாற்றங்கள் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு, தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை, என்.எம்.சி., வெளியிட்டுள்ளது.
புதிய வாய்ப்புகளை உருவாக்கும்?
நடைமுறையில் உள்ள பள்ளிக்கல்வி முறையின்படி, ஒரு மாணவர் தனது 15 வயதிலேயே தான் வாழ்க்கையில் என்னவாகப் போகிறார் என்பதற்கான திட்டமிடல் குறித்து சிந்திப்பார்.
பத்தாம் வகுப்பில் அவர் எடுக்கக்கூடிய மதிப்பெண்கள், அவர் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதாரமாகி விடுகிறது.
தற்போது பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பாடங்களே கற்பிக்கப்படுகின்றன. அதன் பின், பத்தாம் வகுப்பில் பொதுவாக அதிக மதிப்பெண்கள் பெறுபவரே மாநில பாடத்திட்டத்தில் A-Bio எனப்படும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க முடியும்.
அவற்றில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் இருக்கும். இந்தப் பாடப்பிரிவை எடுத்தால், பொறியியல், மருத்துவமும் படிக்கலாம். எனவே, அதிக மாணவர்கள் இந்த பிரிவைத் தேர்ந்தெடுக்க விரும்புவார்கள்.
இயற்பியல், வேதியில், தாவரவியல், விலங்கியல் என, அறிவியல் பாடங்களை மட்டுமே கொண்டுள்ள பாடப்பிரிவும் உள்ளது. இந்தப் பிரிவை எடுத்துப் படிப்பவர்களும் மருத்துவம் படிக்கலாம். ஆனால் பொறியியல் படிக்க முடியாது.
உயிரியலுக்கு பதிலாக, கணினி அறிவியல் பாடத்தைப் படிப்பவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விதிப்படி, உயிரியல் படிக்காத மாணவர்களும்கூட, மருத்துவப் படிப்பில் நுழையும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்தப் புதிய விதி மிகவும் வரவேற்கத்தகது; மாணவர்களுக்கான கல்வியில் கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது. மாணவர்கள் விரும்புவதைப் படிப்பதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.
இந்தப் புதிய விதியின் காரணமாக, அதிகமான மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். அப்போது உருவாகும் போட்டியும்கூட ஆரோக்கியமானதே.
இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உயிரியல் படிக்க வேண்டிய அவசியமில்லை. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு 'டபிள் ப்ரமோஷன்' வழங்கப்படும். அதே போலத்தான் இதுவும்.
எத்தனை ஆண்டுகள் உயிரியல் படிக்கிறார்கள் என்பது முக்கியமில்லையே. அதற்கான தகுதி பெற்றிருந்தால் படிக்கட்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
குழப்பம் என்ன?
பிளஸ் 2வகுப்புக்குப் பிறகு இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பத்தைக் கூடுதல் பாடமாகப் படிக்கலாம் என, தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது.
ஆனால், கூடுதல் பாடம் என்றால் என்ன, அதற்கான தேர்வு எப்போது நடக்கும் என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை. பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கும் அதே பாடங்களுக்கான தேர்வு நடைபெறுமா அல்லது வேறு பாடத்திட்டம் உருவாக்கப்படுமா என்பது குறித்தும், தேசிய மருத்துவ ஆணையம் எதுவும் கூறவில்லை.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவர் ஐந்து பாடங்கள் தவிர, கூடுதலாக ஆறாவது பாடமாக உயிரி தொழில்நுட்பம், கணிதம், பொருளாதாரம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பள்ளி படிக்கும்போதே தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் கூடுதல் பாடம் என்பதே கிடையாது. எனவே, இது எப்படி அமல்படுத்தப்படும் என்பது தெளிவாகக் கூறப்படவில்லை.
தரம் குறையும்?
உயிரியல் பாடத்தை, பள்ளியில் இரண்டு ஆண்டுகள் படிப்பதே மருத்துவக் கல்விக்கான அடிப்படை என்று கூறுபவர்கள், புதிய விதியை ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ் வழியில், பள்ளிக்கல்வி பயின்ற மருத்துவ மாணவர்களுக்கு, இந்த விதி மருத்துவக் கல்வியின் தரத்தைக் குறைக்கும். மனிதர்களின் உயிர்களைக் கையாளும் மருத்துவர்கள் அடிப்படை அறிவு கொண்டிருப்பது அவசியம்.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில், படிக்கும் பாடங்களை தான் விரிவாக மருத்துவ படிப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் படிக்கிறார்கள். விலங்குகளின் இதயத்தைப் பற்றி செய்முறை வாயிலாக பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மனிதர்களின் இதயத்தைப் படிப்பது எளிதாக இருக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள். இந்த விதியை எதிர்க்கும் கல்வியாளர்கள், இந்த விதியால் சமூகத்தில் எதிர்காலத்தில் தரமான மருத்துவர்களே இல்லாத நிலை ஏற்படும் என்கின்றனர்.
மருத்துவக் கல்வியில் படிக்கும் பாடங்கள் என்பது, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் உயிரியல் பாடங்களின் நீட்சியே ஆகும். நீட் தேர்வில், ஏற்கெனவே கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைந்து வருகிறது.
உயிரியல் படிக்காத மருத்துவர்களிடம், இந்த விதியைக் கொண்டு வந்தவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வார்களா? என்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வெளிநாடு செல்ல முடியுமா?
வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்க விரும்புவோர், நீட் தேர்வு எழுதி, தேசிய மருத்துவ ஆணையத்தின் eligibility certificate எனப்படும் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.
புதிய விதிகளின் படி, உயிரியலை கூடுதல் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், இந்த தகுதிச் சான்றிதழ் தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்படும். பிறகு, அவர்கள் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம்.
நிராகரிக்கப்பட்டவருக்கும் விதி பொருந்தும்..!
பிளஸ் 2 வகுப்பில் உயிரியல் படிக்காமல், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தகுதிச் சான்றிதழ் கேட்டவர்களுக்கு, இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
அப்படி இதுவரை நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கும் இந்தப் புதிய விதி பொருந்தும். அதாவது இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, பிளஸ் 2 வகுப்பு முடித்திருந்தாலும், அவர்கள் தற்போது உயிரியல் பாடத்துக்கான தேர்வு எழுதி, வெளிநாட்டில் மருத்துவம் படிக்க செல்லலாம்.
இந்தியாவில் செல்லும்?
இல்லை. இந்தியாவில் படிக்க விரும்புவோர், இந்த அறிவிப்பு வெளியான பிறகு பன்னிரண்டாம் வகுப்பு எழுதுபவராக இருக்க வேண்டும். ஏற்கெனவே பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, இந்த அறிவிப்பு பொருந்தாது.
அதேபோல, இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பு படிப்பவர்களும், கூடுதல் பாடமாக உயிரியலை எடுத்து படித்தால், வரும் 2023-24ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இது அமலுக்கு வருகிறது.
பழைய விதிகளை எதிர்த்து, நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில், தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதியைச் சுட்டிக்காட்டி ஆணையம் வழக்குகளைத் திரும்ப பெறும் என்றே நம்பலாம்....!
முக்கியத்துவம் என்ன?
நீட் தேர்வில், மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இதில், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து, தலா 50 கேள்விகள் கேட்கப்படும். இவற்றில், 45 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதுமானது.
அதே போல, உயிரியல் பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படுகிறது. இவற்றில் 90 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதுமானது.
இதன்மூலம், 200 கேள்விகளில், 180 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதுமானது. இவை அனைத்தும் 720 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள். தவறான பதிலுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இருக்கும் என்பதால், மாணவர்கள் கவனத்துடன் எழுதுவது அவசியம். இதற்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
எது எப்படியே, சலுகைகளால் கல்வியில் தரமற்ற நிலை உருவாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதே, அரசுகள், அமைப்புகளின் முக்கிய நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.nmc.org.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












