2021-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் வருடம் 4 முறைகளாக தேர்வு நடைபெறவுள்ளது.
நடப்பு ஆண்டு கொரோனா தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக ஜேஇஇ தேர்வை நடத்துவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் இத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, வரும் 2021-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த வருடம் ஜேஇஇ மெயின் தேர்வு 4 முறையாக நடைபெறும் என்றும், முதல்கட்ட தேர்வு பிப்ரவரி மாதம் 22 முதல் 25 ஆம் தேதி வரையில் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
JEE Main 2021 தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தற்போது முதல் விண்ணப்பிக்கலாம்.
மேலும், 2021-ஆம் ஆண்டு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் இந்தி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், பிற மொழிகளில் தேர்வுகள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதத் தேர்வைத் தொடர்ந்து, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும் என தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.