நாட்டிலுள்ள துணை ராணுவப் படைகளில் ஒன்றான இந்தோ திபெத் பார்டர் போலீஸில் (ஐடிபிபி) பணியிடங்கள் காலியாக உள்ளன. விளையாட்டுப் பிரிவில் இந்த இடஒதுக்கீடு நடைபெறுகிறது. எனவே, தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர்களிடமிருந்து இந்த காலியான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஐடிபிபி துணை ராணுவப் படைப் பிரிவில் கான்ஸ்டபிள் அந்தஸ்தில் 248 இடங்கள் காலியாக உள்ளன.
இந்திய - திபெத் எல்லைக் காவல்படை (Indo-Tibetan Border Police -ITBP) என்பது இந்திய - சீன எல்லையிலுள்ள பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாக அமைந்து உள்ளது.
காஷ்மீரின் லடாக் பகுதியிலுள்ள காரகோரம் கணவாய் முதல் அருணாசலப் பிரதேசம் ஜசிப் லா என்ற இடம்வரையுள்ள 3488 கி.மீ இந்திய-சீன எல்லையை இந்த ஐடிபிபி பாதுகாக்கிறது.
பனி பனிப்புயல், பனிப்பாறை சரிவுகள், நிலச்சரிவுகள் போன்ற இயற்கை சீற்றங்களுடன் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் 9000 முதல் 18000 அடி உயரத்தில் எல்லையை இந்த வீரர்கள் பாதுகாக்கிறார்கள்.

உள்நாட்டு மருத்துவ முகாம், பேரழிவுக்கால மேலாண்மை, அணுக்கரு மற்றும் கதிர் விபத்து, உயிரியல் மற்றும் வேதியல் பேரழிவுகள் போன்ற சூழல்களுக்கு ஏற்ப இப்படை வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
பொசுனியா எர்செகோவினா, கொசோவோ, எயிட்டி, சூடான் உள்ளிட்ட நாடுகளில், ஐ.நா. அமைதி நடவடிக்கைகளில் இந்தப் படை பங்கு கொள்கிறது. மலைகளில் மீட்புபணி புரிவதாலும், இயற்கை பேரழிவுகள் நடக்குமிடம் என்பதாலும் இப்படையின் பெரும்பாலனவர்களுக்கு மலையேற்றமும், பனிச்சறுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய - திபெத் எல்லைக் காவல்படை 1962 அக்டோபர் 24-ம் தேதி மத்திய சேமக் காவல் படைச் சட்டம் மூலமாக உருவாக்கப்பட்டது. பின்னர் இந்திய - திபெத் எல்லைக் காவல்படை சட்டம் உருவாக்கப்பட்டு 1994 முதல் மறுவரையறை செய்யப்பட்டது. இப்படையின் முதல் தலைமை இயக்குநராக சர்தார் பால்பீர் சிங் அப்போது பொறுப்பேற்றார். இந்தப் படை எல்லையில் அசாதாரணமான பணிகளைச் செய்து வருகிறது.
இந்த ஐடிபிபி துணை ராணுவப் படையில்தான் தற்போது, காலியாக உள்ள இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதி உள்ளோர் விண்ணப்பிக்க பி.இ., சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
மேலும் 28.11.2023-ம் தேதி அடிப்படையில் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகுதியாக சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை அடிப்படையில் விளையாட்டு வீரர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்தவேண்டும். மகளிர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பங்களை அனுப்ப 28.11.2023 கடைசி நாளாகும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு recruitment.itbpolice.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












