மத்திய அரசின் மிக முக்கிய துறைகளில் ஒன்றான அஞ்சல்துறையில் ஆயுள் காப்பீடு விற்பனை செய்யும் முகவர் என்னும் அற்புதமான பணிக்குத் தற்போது வாய்ப்புகள் வந்துள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் சென்னையில் வரும் 20-ம் தேதி (ஜனவரி 20) இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயன் அடையலாம்.
இந்திய அஞ்சல் துறை என்பது 'இந்தியா போஸ்ட்' (India Post) என்ற பெயரில் சிறப்பாக செயல்படுகிறது. இது மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் மிகச் சிறப்பான அஞ்சல் சேவை ஆகும். இது கடித சேவை உட்பட பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. தினந்தோறும் இரண்டு லட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்துக்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.
இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் மிக அதிக அளவில் பயன் பெறுகின்றன. 21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்ற விகிதத்தில் இது அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் உள்ளன.
இந்திய அஞ்சல் துறை மொத்தம் 1,54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாக உள்ளது. உலகின் மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீன நாட்டில் கூட 57 ஆயிரம் தபால் அலுவலகங்கள்தான் உள்ளன. இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 6 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி (பிரிட்டிஷ் அரசு) முதன்முதலாக 1764 - 1766-களில் பம்பாய், மெட்ராஸ் மற்றும் மேற்கு வங்க மாகாணங்களில் அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னராக இருந்த போது அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது. அப்போது 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா (12 பைசா) அப்போது வசூலிக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக வளர்ந்தது. 1947-ம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்னர் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது அஞ்சல்துறை.
இந்த சிறப்புவாய்ந்த அஞ்சல்துறையில் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பாலிசிகளை விற்பனை செய்வதற்கு அஞ்சல்துறை சார்பில் முகவர்கள் அவ்வப்போது நியமனம் செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அஞ்சல்துறை சார்பில் நடத்தப்படும் ஆயுள் காப்பீடு பாலிஸிகளை விற்பனை செய்ய முகவர்களை நியமனம் செய்வதற்கான நேர்முகத் தேர்வு வரும் 20-ம் தேதி சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 20-ம் தேதி காலை 11 மணிக்கு அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், முதன்மை அஞ்சல் தலைவர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அஞ்சல்துறையில் ஆயுள் காப்பீடு விற்பனை செய்யும் முகவர் பணிக்கான கல்வித்தகுதி:
மத்திய அரசின் துறையான அஞ்சல் துறையில் இந்த வகையான பணிகளைப் பெறுவதற்கு கல்வி தகுதியாக குறைந்தது 10-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
அஞ்சல்துறையில் ஆயுள் காப்பீடு விற்பனை செய்யும் முகவர் பணிக்கான வயது வரம்பு:
அஞ்சல்துறையில் ஆயுள் காப்பீடு விற்பனை செய்யும் முகவர் பணிக்கு விண்ணப்பிக்க 18-லிருந்து 50வயதுக்குள் இருக்க வேண்டும்.
யார் விண்ணப்பிக்கலாம்....
சுய தொழில் செய்வோர், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள்,அங்கன்வாடி, சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
யாருக்குத் தகுதி இல்லை:
இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை. அவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கொண்டு வர வேண்டியது என்ன....
மேற்கண்ட தகுதியுடையவர்கள், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதுச்சான்று, முகவரிச் சான்று, மற்றும் கல்வி சான்று ஆகியவற்றை நேர்முகத் தேர்வு நடைபெறும் 20-ம் தேதி கொண்டுவர வேண்டும்.
ஊக்கத் தொகை:
முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சேர்க்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு விற்பனை செய்யும் முகவர் பணியானது மிகவும் சிறப்பான பணியாகும். ஏற்கெனவே பல்வேறு பணியில் இருப்பவர்களும் இதில் சேர்ந்து பயன் அடைய முடியும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/pli.aspx என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












