சென்னை ஐஐடி மாணவர்கள், ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துத் துறைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகளின் அடிப்படையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழகத்தில் கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வாறு, கல்லூரிக்கு வரும் மாணவர்களின் உடல் நலத்தினைக் கருத்தில் கொண்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது சென்னை ஐஐடியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், ஐஐடி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஐஐடி முடிவு செய்து பரிசோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே, மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால் அனைத்துத் துறைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.