சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு மாநில மாணவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் புதுக் கல்லூரி விரைவில் பவள விழாவை (75-ம் ஆண்டு) கொண்டாடப் போகிறது.
சென்னையின் இதயப் பகுதியான ராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது நியூ காலேஜ் என்று அழைக்கப்படும் புதுக் கல்லூரி (The New College). இந்தக் கல்லூரி தென்னிந்தியாவில் சென்னையில் புகழ்பெற்ற ஓர் உயர் கல்வி நிறுவனமாகவும், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
1951ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்னாட்சி நிலை பெற்ற கல்லூரியாகும். தென்னிந்தியாவில் இஸ்லாமிய மாணவர்களின் கல்வித் தேவையை முன்னிட்டு தென் இந்திய முஸ்லிம் கல்வி சங்கம் (Muslim Educational Association of Southern India, MEASI) இக்கல்லூரியை நிறுவியது.

புதுக் கல்லூரியானது, சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு முஸ்லிம் சிறுபான்மை நிறுவனமாகும். பொதுவாக கல்வியில் பின்தங்கிய பிரிவினருக்கும், குறிப்பாக முஸ்லிம் மாணவர்களுக்கும் உயர்கல்வி வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டாலும், நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் அதன் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இடைநிலைப் படிப்பில் 200 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, தற்போது உதவி பெறும் மற்றும் சுயநிதிப் பிரிவுகளில் 6000க்கும் மேற்பட்ட மாணவர்களின் கூட்டுப் பலத்துடன் வளர்ந்துள்ளது. தற்போது கல்லூரியில் 28 இளங்கலை, 14 முதுகலை, ஏழு எம்.பில்., மற்றும் 11 பிஎச்.டி. கலை, வணிகம் மற்றும் அறிவியல் ஸ்ட்ரீம்களில் பாடப்பிரிவுகள் அமைந்துள்ளன.
புது கல்லூரியானது கடந்த 2007ம் ஆண்டில் 'தன்னாட்சி' (அட்டானமஸ்) அந்தஸ்தைப் பெற்றது. மேலும் பல்கலைக்கழக மானியக்குழு(UGC) மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட தேர்வு அடிப்படையிலான முறையைப் பின்பற்றுகிறது.
கல்லூரியானது தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) மூன்றாவது சுழற்சியில் ஏ அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
தற்போது இந்தக் கல்லூரியில் பி.ஏ. அராபிக், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, சோஷியாலஜி, தமிழ், உருது, பிசினஸ் எக்கானமிக்ஸ், டிஃபன்ஸ் அன்ட் ஸ்டிராஜிக் ஸ்டடீஸ், கிரிமினாலஜி அன்ட் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், பி.காம் ஜெனரல், கார்ப்பரேட் செக்கரட்டரிஷிப், அக்கவுன்ட்டிங் அன்ட் ஃபைனான்ஸ், பேங்க் மேனேஜ்மெண்ட், புரொபஷனல் அக்கவுன்ட்டிங், இன்பர்மேஷன் அன்ட் சிஸ்டம்ஸ் மேனேஜ்மெண்ட், பிபிஏ, பிஎஸ்சி வேதியியல், இயற்பியல், கணிதம், அட்வான்ஸ்டு ஜுவாலஜி அன்ட் பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி அன்ட் பிளான்ட் பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, எலக்ட்ரானிக் மீடியா, பிசிஏ போன்ற படிப்புகளை வழங்குகிறது.
பட்ட மேற்படிப்பில் எம்.ஏ. ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, தமிழ், எம்.காம் ஜெனரல், கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், எம்.எஸ்சி வேதியியல், இயற்பியல், கணிதம், பாட்டனி, கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகளையும் வழங்குகிறது.
அதுமட்டுமல்லாமல் ஆய்வு பிரிவில் பிஎச்.டி படிப்புகளை செவ்வனே வழங்கி மாணவர்களுக்கு கல்விச் சேவையை ஆற்றி வருகிறது.
இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ.வி.ராமன், அரசியல்வாதி ஜி.கே.வாசன், நடிகர்கள் ராதாரவி, சரத்குமார், கார்த்திக், ஜெய்சங்கர், வினீத், நாகேந்திர பிரசாத், சின்னி ஜெயந்த், தயாரிப்பாளர் எம்.எஸ்.குகன், மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த திமுக தலைவருமான டி.ஆர்.பாலு, தமிழ் இயக்குநரும், நடிகருமான ராஜ் கபூர், நடிகர் பரத், வீரபாகு, பிரசன்னா பாண்டியன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், புனீத் ராஜ்குமார், ஜெயிலர் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோர் இந்தக் கல்லூரியில் பட்டப்படிப்பைப் படித்தவர்கள்தான்.
மாணவர்களின் நலனுக்காக பிளேஸ்மெண்ட் செல் பிரிவை (பணியமர்த்துதல் பிரிவு) கல்லூரி நிர்வாகம் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் கல்லூரி வளாகத்தில் நேர்முகத் தேர்வுகளை நடத்தி பட்டம் பெற்றுச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு வேலைவாய்ப்பையும் கல்லூரி நிர்வாகம் உறுதி செய்கிறது.
1951-ல் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி வரும் 2026-ல் 75 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து கல்லூரியின் பவள விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புதுக் கல்லூரி நிர்வாகத்தினர் செய்யவுள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களை பட்டதாரியாக மாற்றி பெருமை சேர்த்துள்ளது இந்தக் கல்லூரி. வரும் ஆண்டுகளிலும் இந்தக் கல்லூரியின் பணி செவ்வனே தொடரவேண்டும் என்பதே மாணவர்களின் ஆசை.


Click it and Unblock the Notifications












