நமது நாட்டில் தற்போது பி.இ., பி.டெக், பி.ஆர்க், ஐ.டி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற படிப்புகள் பிரபலமாக உள்ளன. அதைப் போலவே தற்போது பி. பிளான் என்ற படிப்பும் (B.Plan) புதிதாக சேர்ந்துள்ளது.
இந்தப் படிப்பு குறித்து பல இளைஞர்களுக்குத் தெரிய வரவில்லை.
வரும் ஆண்டுகளில் இந்த படிப்பு மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே 12-ம் வகுப்பு படித்து முடித்து வரும் இளைஞர்கள் இந்தப் படிப்பைத் தேர்வு செய்யலாம்.
நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகிப்பதிலும் அரசுக்கு வழிகாட்டுவதில் முக்கிய பங்காற்றும் 'நிதி ஆயோக்' அமைப்பு, உயர் கல்வி துறைக்கு முக்கியமான வழிகாட்டுதலை தற்போது வழங்கியது. இதில் நாட்டின் நகர்ப்புற திட்டமிடல் திறன் தொடர்பான ஒரு பரிந்துரையும் அடங்கும். வருங்காலத்தில் மிகவும் திறன் வாய்ந்த பிளானர்கள் (திட்ட அமைப்பாளர்கள்) நாட்டில் அதிகளவில் தேவைப்படுகிறார்கள் என்றும், ஆண்டுக்கு சராசரியாக 6,000 பி.பிளான் பட்டதாரிகள், 2,000 எம்.பிளான் பட்டதாரிகள் தேவைப்படுவதாகவும் நிதி ஆயோக் அண்மையில் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்துதான் தற்போது பி. பிளான் படிப்பு நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. இதையடுத்து சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 'பி.பிளான்' பட்டப்படிப்பு கடந்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் நமது நாடு முழுவதும் பிரபலமாக உள்ள புதிய படிப்பான பி.பிளான் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டிடக்கலை (பி.ஆர்க்) பொறியியல் படிப்புகளைக் கற்பிக்கும் 'ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் பிளானிங்' மூலமாக பி.பிளான் வகுப்புகள் தற்போது முழு மூச்சுடன் தொடங்கப்பட்டுள்ளன.
இங்கு உள்ள 40 சீட்டுகளில் பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றிலேயே 38 இருக்கைகள் நிரம்பி விட்டன. வரவேற்புக்குரிய பி.பிளான் படிப்பு விரைவில் மற்ற முன்னணிக் கல்லூரிகளிலும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பி.பிளான் என்பதில் கட்டிடங்கள் மற்றும் நகரியங்களுக்கான திட்ட வடிவமைப்பு தயாரிப்பது முக்கிய இடமாக உள்ளது. இந்தியாவில் நகர்மயமாதலும், ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கமும் அதிகரித்திருப்பதால் பி.பிளான் பட்டதாரி நிபுணர்களின் தேவையும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அதைப் போலவே அந்தத் துறையைச் சார்ந்த அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. கட்டிடம் கட்டுதல், கட்டிடக்கலை ஆகியவை மட்டுமன்றி இன்டீரியர் டிசைனிங் துறையில் எதிர்காலத்தை திட்டமிடுவோருக்கும் பி.பிளான் பட்டப்படிப்பு நிச்சயம் உதவும் என்பது நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
நாட்டில் பி.ஆர்க்., படிப்பில் சேர நாட்டா (NATA) நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயமாக உள்ளது. ஆனால், பி.பிளான் படிப்பில் சேர்வதற்கு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் வழக்கமான ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பங்கேற்றால் போதும்.
அதாவது அரசு நடத்தும் கலந்தாய்வுகளில் பங்கேற்பதற்கு விண்ணப்பித்தாலே போதுமானது. அதிக அளவு மதிப்பெண்கள் இருக்கும்பட்சத்தில் இந்தப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு வழி கிடைத்துவிடும்.
பி.இ. சிவில், பி.ஆர்க்., டிசைனிங் படிப்புகளில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அவற்றுக்கு மாற்று படிப்பாகவும் பி.பிளான் படிப்பை தேர்வு செய்ய முடியும். பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் பி.பிளான் கல்லூரிகளில் சேர்க்கை சாத்தியமாகும் என்பதால் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும்.
கணிதம் உள்ளிட்ட அறிவியல் பாடங்களை நன்றாக படிக்கவேண்டும். மேலும், படங்களை வரைவதில் ஆர்வம் கொண்டோரும் அதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். இதன்மூலம் நமகுக்கு பி.பிளான் படிப்பு சாத்தியமாகும்.


Click it and Unblock the Notifications












