பல்வேறு புகழைப் பெற்றிருக்கும் உத்தரபிரதேச மாநிலகத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறிய போதனைகளை உள்ளடக்கிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த பிபிஏ-எம்பிஏ (BBA-MBA) படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி சீரிய முறையில் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அலகாபாத் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையில் இந்த கல்வி ஆண்டில் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறிய மேலாண்மை (மேனேஜ்மெண்ட்) தொடர்பான போதனைகளை உள்ளடக்கிய ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பிபிஏ-எம்பிஏ படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த பிபிஏ-எம்பிஏ படிப்பில் கிருஷ்ணரின் பகவத் கீதை, ராமாயணம், வேத உபன்யாசம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள மேலாண்மை தொடர்பான சிறப்பான கருத்தியல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், பாரம்பரிய முறையில் புதிய மேலாண்மை நுண்ணறிவுகளை வழங்கும் மேலாண்மை தொடர்பான படிப்பாக இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அசாதாரணமான சூழ்நிலைகள், பாதகமான சூழ்நிலைகள், மோசமான சூழ்நிலைகளில் அமைதியாக மாணவ, மாணவிகள் இருக்க உதவுவதற்கான அஷ்டாங்க யோகாவும் இந்தப் பாடத்திட்டத்தின்படி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இது மட்டுமின்றி, தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா, விப்ரோவின் அசிம் பிரேம்ஜி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் அம்பானி, இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, சுனில் மிட்டல் மற்றும் பிர்லா போன்ற முன்னணி தொழிலதிபர்களின் ஸ்மார்ட் நிர்வாக முடிவுகள் குறித்தும் மாணவர்களுக்கு இந்தப் பாடத்திட்டத்தின்போது கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சாணக்கியர்களின் போதனைகளும் வெற்றிக்கான மந்திரங்களாக மாணவ, மாணவிகளுக்கு கற்றுத் தரப்படும்.
இந்த பட்டப்படிப்பில் 10 செமஸ்டர் தேர்வுகள் இருக்கும். இந்திய மேலாண்மை சிந்தனை, ஆன்மீகம், கிருஷ்ணரின் பகவத் கீதை, ராமாயணம், வேத உபநிடதம் ஆகியவற்றில் கூறப்பட்ட மேலாண்மை கருத்தியல்கள், கலாச்சார நெறிமுறைகள், செயற்கை நுண்ணறிவு போன்ற தலைப்புகளில் பாடங்கள் இருக்கும் என்று அலாகாபாத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டப் படிப்பில் சேரும் ஒரு மாணவர் தனது படிப்பை முதல் ஆண்டோடு படிப்பை நிறுத்திவிட்டால் அவருக்கு ஒரு வருட சான்றிதழ் அளிக்கப்படும்.
இரண்டாம் ஆண்டு முடித்தவர்கள் டிப்ளமோ பட்டயமும், மூன்றாம் ஆண்டில் பிபிஏ பட்டமும், ஐந்தாம் ஆண்டில் எம்பிஏ பட்டமும் பெறுவார்கள் என்றும் அலாகாபாத் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படிப்பில் 26 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், பல மாணவர்கள் இந்த படிப்பில் ஆர்வத்துடன் சேர்ந்து படிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச மாநில அரசின் இந்த சிறப்பான முயற்சிக்குக் கல்வியாளர்களும், கல்வி நிபுணர்களும் பாராட்டுகளையும், புகழாரத்தையும் சூட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications












