போலி எம்பிஏ(MBA) கிராஷ் கோர்ஸ் (crash courses) குறித்த விளம்பரங்கள் உலா வருவதாகவும், இதைப் பார்த்து மாணவர்கள் ஏமாற வேண்டாம் என்றும் நமது நாட்டின் தொழில்நுட்பக் கல்வி ஒழுங்குமுறை அமைப்பான ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் -AICTE), எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஒருவர் 10 நாள் எம்.பி.ஏ கிராஷ் கோர்ஸ் படிப்பு தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டதை மாணவர்களுக்கு இந்த எச்சரிக்கையை ஏஐசிடிஇ (AICTE) வெளியிட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (All India Council for Technical Education - AICTE) என்பது இந்தியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மருந்தியல் (Pharmacy), கட்டுமானக்கலை மற்றும் நகரமைப்பு (Architecture & Town Planning), விடு தி மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பம் (Hotel Management & Catering Technology), பயன்பாட்டுக் கலை மற்றும் தொழில் (Applied Arts & Crafts), மேலாண்மைக் கல்வி (Management Studies) மற்றும் கணிப்பொறி பயன்பாடு குறித்த தொழிற்கல்விப் பாடங்களுக்கு அனுமதி வழங்கும் தன்னாட்சி அமைப்பாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

1945-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொழில்நுட்பக் கல்வி வசதிகள் மற்றும் அவைகளைக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்படியாக ஒருங்கிணைக்கவும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு தேசியக் கல்விக் கொள்கையின்படி, இந்த அமைப்பு தனிப்பட்ட அதிகாரமுடைய அமைப்பாக திட்டமிடுதல், கட்டுப்பாடுகள், தரம் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், தரம் நிர்ணயித்தல், குறிப்பிட்ட பகுதிகளுக்கு நிதியுதவி அளித்தல், கண்காணித்தல் மற்றும் சரிபார்த்தல் போன்றவைகளின் மூலம் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சி மற்றும் மேலாண்மையை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் இயங்கும் இந்த அமைப்பு இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான சட்டம் (AICTE Act No. 52 of 1987) கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது இந்தச் சட்டம் 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் பின் தன்னியக்கமான அமைப்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு 1988 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் தற்போது புது டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் 38,542 சதுர அடிப் பரப்பளவுள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பிற்கான நிர்வாக அலுவலகம் மற்றும் இதர அலுவலகக் கட்டிடங்களுக்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஏஐசிடிஇ அமைப்புதான் தற்போது மாணவ, மாணவிகளுக்கு போலி எம்பிஏ கிராஷ் கோர்ஸ் தொடர்பான எச்சரிக்கையைத் தந்துள்ளது.
இதுதொடர்பாக ஏஐசிடிஇ (AICTE) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது:
சில ஊக்கமூட்டும் பேச்சாளர்கள் மற்றும் இணைய பிரபலங்கள் 10 நாள் எம்.பி.ஏ கிராஷ் படிப்பை வழங்குகின்றன என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் கவனத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பான விளம்பரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இது போன்ற தவறான போக்கு நாட்டின் இளம் மனங்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்பதை அனைத்து பங்குதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும், மாணவர்கள் இதுபோன்ற படிப்புகளில் சேர்ந்து ஏமாற வேண்டாம்.
இவ்வாறு ஏஐசிடிஇ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஏஐசிடிஇ அனுமதி அல்லது ஒப்புதல் இல்லாமல், எம்.பி.ஏ அல்லது மேலாண்மை படிப்புகள் (முதுகலை பட்டப்படிப்புக்கு வழிவகுக்கும்) உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை வழங்க எந்த நிறுவனமும் அல்லது பல்கலைக்கழகமும் அனுமதிக்கப்படாது என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MBA என்பது அதிகாரப்பூர்வமாக இரண்டு வருட முதுகலை பட்டப்படிப்பு திட்டமாகும், இது வணிகம் மற்றும் நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் மேம்பட்ட திறன்கள் மற்றும் அறிவை தனிநபர்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ உள்ளிட்ட நிர்வாகத் படிப்பை வெறும் 10 நாட்களில் முடிக்க முடியாது என ஏ.ஐ.சி.டி.இ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏஐசிடிஇ கூறும்போது, "அத்தகைய தனிநபர்கள்/ நிறுவனங்கள் வழங்கும் எம்.பி.ஏ கிராஷ் படிப்பு தவறானது மற்றும் பொருத்தமற்றது என்பதை அனைத்து பங்குதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். அனைத்து பங்குதாரர்களும்/ மாணவர்களும் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற மோசடி சலுகைகளுக்கு இரையாகாமல் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, போலியான விளம்பரங்களை நம்பி மாணவ, மாணவிகள் பணம் கட்டி ஏமாற வேண்டாம். அவர்கள் எம்பிஏ படிப்புகளைப் படிக்க வேண்டும் என்றால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கலாம். அதற்கான ஆலோசனைகளை ஏஐசிடிஇ வழங்குகிறது.


Click it and Unblock the Notifications












