ஐடிபிஐ வங்கியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த நபர்கள் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களைப் பெற idbibank.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.
ஐடிபிஐ வங்கி லிமிடெட் அல்லது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி மத்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியாகும். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த கடன்கள் மற்றும் இதர நிதி வசதிகளை வழங்குவதற்காக 1964 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டதாகும். இந்த வங்கி இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உருவாக்கப்பட்ட வங்கியாக இருந்தாலும், இது சாதாரண வணிக வங்கிகளைப் போலவும் சீரிய முறையில் திறம்பட செயல்படுகிறது.

ஐடிபிஐ வங்கி தற்போது இந்தியாவில் 1,513 கிளைகள், ஐக்கிய அரபு அமீரக நாட்டிலுள்ள துபாயில் ஒரு வெளிநாட்டுக் கிளை, சிங்கப்பூர் மற்றும் சீனாவின் பெய்ஜிங்கில் இரண்டு வெளிநாட்டு மையங்கள் உட்பட மொத்தமாக 1,013 மையங்களைப் பெற்றுள்ளது. மேலும், இந்த வங்கி 2,713 ஏடிஎம்களுடன் உலக அளவில் 10 ஆவது இடத்தில் இருக்கும் தொழில் மேம்பாட்டு வங்கியாகும்.
இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட, இந்திய அரசுக்குச் சொந்தமான 26 வணிக வங்கிகளுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய பெருமைவாய்ந்த ஐடிபிஐ வங்கியில் ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் உட்பட 2,100 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 800, எக்சிகியூட்டிவ் பிரிவில் (சேல்ஸ், ஆப்பரேஷன்) 1,300 என மொத்தம் 2,100 பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலையில் சேர்வதற்குக் கல்வித்தகுதியாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தது 60 சதவீத (எஸ்.சி., எஸ்.டி., 50% மதிப்பெண்கள் போதுமானவை) மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதியாக 1.11.2023 அடிப்படையில் 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறும்.
சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்கள் ஊர்களுக்கு அருகில் உள்ள நகரங்களைத் தேர்வு செய்து தேர்வுகளை எழுதலாம்.
ஆன்லைன் முறையில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக்கட்டணமாக ரூ. 1000 வசூலிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ. 200 மட்டும் செலுத்தினால் போதும்.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசிநாள் டிசம்பர் மாதம் 6-ம் தேதி (6.12.2023) ஆகும்.
மேலும் கூடுதல் விவரங்களைப் பெற இளைஞர்கள் idbibank.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












