வேலூரில் செயல்பட்டு வரும் விஐடி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை ரத்து அப்பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், 12ம் வகுப்பில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூர் விஐடி பல்கலைக்கழகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம். ஆண்டுதோறும் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, நடப்பு கல்வியாண்டிற்கு விஐடி வேலூர், சென்னை, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வளாகங்களில் படிப்பதற்கு ஏற்கனவே மாணவர்கள் விண்ணப்பித்துவிட்டனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக மாணவர்கள் நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் நிலவி வருவதாலும், மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டும் நடப்பு கல்வியாண்டில் விஐடி-யின் பொறியியல் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
எனவே, விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் உள்ளிட்ட பாடத்தில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் விஐடி பல்கலைக்கழகத்தில் விருப்பமான பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம்.
மேலும், ஜேஇஇ (JEE) தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விஐடி-யில் சேர முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களின் ஜேஇஇ மதிப்பெண்களை விஐடி பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதேப் போல 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண்களை உடனடியாக விஐடி பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து, மேலும் விபரங்களை அறியவிரும்புவோர் அல்லது ஏதேனும் சந்தேகம் இருப்பின் விண்ணப்பதாரர் ugadmission@vit.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது 9566656755 என்னும் வாட்ஸ்அப் எண் அல்லது 18001020536 எனும் கட்டணம் இல்லாத தொடர்பு எண்களை அணுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.