தமிழகத்தில் குரூப்-1 தேர்வு அறிவிப்புக்காகக் காத்திருந்த ஆர்வலர்களுக்கு நல்லதொரு செய்தியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தற்போது வெளியிடுள்ளது. குரூப்-1 தேர்வுக்கான தேதி, சலுகை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கூடுதல் விவரம் தேவைப்படுவோர் tnpsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்து அனுப்புகிறது. ஆள்தேர்வுக்காக போட்டித் தேர்வுகளை (குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4, குரூப் 8 மற்றும் VAO) நடத்துவதற்கு பொறுப்பான மாநில தலைமை ஒழுங்குமுறை அமைப்பாக டிஎன்பிஎஸ்சி உள்ளது.
இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1929-ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு இது செயல்பட்டு வருகிறது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission ஆகும். மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957-ல் இது மதராஸ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்" என்று மாறிவிட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் அசிஸ்டென்ட் கமிஷனர் 21, மாவட்ட கல்வி அதிகாரி 8 என மொத்தம் 29 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இதனால் இந்தத் தேர்வுக்காகக் காத்திருந்த ஆர்வலர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காகத் தயாராகி வருகின்றனர்.
தமிழக அரசின் குரூப்-1பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஆர்வலர்கள் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, பி.எல்., அல்லது ஐந்து வருட பி.எல் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ஓராண்டு வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவமும் இருக்கவேண்டும். இதுதவிர குரூப்-1 பணியிடத்தின் கீழ் வரும் மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு முதுநிலை பட்ட மேற்படிப்பை (பி.ஜி. பட்டப்படிப்பு) முடித்திருக்க வேண்டும்.
தமிழக அரசின் குரூப்-1பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 1.7.2024 அடிப்படையில் அசிஸ்டென்ட் கமிஷனர் 34, மாவட்ட கல்வி அதிகாரி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அரசின் குரூப்-1பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் குரூப்-1பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் இந்த குரூப்-1 பணியிடத் தேர்வுக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: தமிழக அரசின் குரூப்-1பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக பிரிலிமினரி தேர்வுக்கு ரூ. 100, மெயின் தேர்வுக்கு ரூ. 200 வீதம் செலுத்தவேண்டும்.
கடைசிநாள்: தமிழக அரசின் குரூப்-1பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரும் 22.5.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரம் தேவைப்படுவோர் tnpsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












