டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வினை எழுத கட்டண விலக்கு கோராதவர்கள் ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும் எனவும், அதற்கான காலக் கெடுவினையும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் குரூப் 1 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க மூலச் சான்றிதழ்களை வரும் 26-ஆம் தேதிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் அரசு இணைய சேவை மையங்கள் வழியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்க முடியாது. அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்கப்படாது.
மேலும், முதல் நிலை எழுத்துத் தேர்வுக்கு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.200 அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையத்தில் வரும் 26-ஆம் தேதிக்குள்ளாகச் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தத் தவறும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய முடியும். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












