தமிழகம் முழுவதும், வரும் செப்டம்பர் 1ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்க சுமார் 17 லட்சம் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் குரூப் 4 தொகுதியில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள் உள்ளன. இத்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 14ம் தேதியன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் சுமார் 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு கடந்த 22-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. குரூப் 4 தேர்விற்காக 301 தாலுகா மையங்களிலும் தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
கட்டுப்பாடுகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்துத் தேர்வில் பங்கேற்க உள்ள தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, செல்லிடப்பேசி மற்றும் இதர மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பொருள்களை வைத்திருப்போர், தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது வினாத்தாளும் செல்லாததாக்கப்படும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் செல்லிடப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை தேர்வுக்கூடத்துக்குக் கொண்டு வர அனுமதி இல்லை. அவ்வாறு கொண்டு வரும் பொருள்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர இயலாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications












