டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த பிப்ரவரி, மார்ச் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வரும் 31ஆம் தேதி முதல் சான்றுகளைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த பிப்ரவரி, மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களுக்குச் சான்று சரிபார்ப்புப் பணி தொடங்கவுள்ளதாகவும் சான்றுகளைப் பதிவேற்றம் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2017-2018ஆம் ஆண்டுக்கான 105 அறநிலையத்துறை செயல் அலுவலர் (கிரேடு III) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுக் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று தேர்வு நடைபெற்றது. இதில், 46,316 பேர் பங்கேற்றனர்.
இத்தேர்வில் செயல் அலுவலர் பணிக்கு தேர்ச்சி பெற்ற 55 பேரும் சான்றிதழ் சரிபார்ப்புக்காகத் தேவையான சான்றுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வரும் 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை சான்றுகளைச் சமர்ப்பிக்கலாம்.
இத்துடன் கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி நடைபெற்ற தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பணியிடம் 9, உதவிப் பொறியாளர் பணியிடம் 32 ஆகியவற்றுக்குத் தேர்வான 91 பேரும் இதேபோல (31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை) சான்றுகளைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2018-2019ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிலவியல் மற்றும் சுரங்க துறையில் உதவி நிலவியலாளர், புவியியலாளர் பதவிகளுக்கான 16 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 சான்றுகளை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












