தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 28.08.2019, 04.10.2019 அன்று வெளியிடப்பட்டது.
இதனிடையே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 15.11.2019 அன்று வெளியான பத்திரிக்கை செய்தியில் ஏற்கனவே விண்ணப்பித்துப் பணி அனுபவச் சான்றுகளைப் பதிவேற்றம் செய்ய தவறிய விண்ணப்பதாரர்களுக்குப் பின்னர் வாய்ப்பு வழங்கப்படும். கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து சில கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதால் அவ்விவரங்களைப் பதிவு செய்திட பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் ஏற்கனவே முழுமையாக விண்ணப்பித்துப் பணி அனுபவச் சான்றுகளைப் பதிவேற்றம் செய்திடாத விண்ணப்பதாரர்கள் பணி அனுபவ சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்துள்ள பல்வேறு விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியவில்லை என புகார் எழுந்துள்ள நிலையில் குறித்த நேரத்தில் 15-11-2019 மாலை 5 மணிக்குள் விண்ணப்ப பதிவினை (Registration) முடித்தவர்களுக்கு மட்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தற்போது வாய்ப்பு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முடிவு செய்துள்ளது.
எனவே, மேற்காணும் படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக பணி அனுபவ சான்றிதழ்களை மட்டும் பதிவேற்றம் செய்திடவும், விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தவறியவர்கள் கட்டணம் செலுத்திடவும் 19.12.2019 முதல் 21.12.2019 மாலை 5 மணி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications












