11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், தமிழக அளவில் கோவை மாவட்டம் 98.10 சதவிகித தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். ஊரடங்கின் காரணமாக இத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று (ஜூலை 31ம் தேதியன்று) முடிவுகள் வெளியிடப்பட்டது.
அதில், விருதுநகர் மாவட்டம் 97.90 சதவிகித தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், 97.51 சதவிகித தேர்ச்சியுடன் கரூர் மாவட்டம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு 97.6 சதவிகித தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் மூன்றாம் இடத்திலிருந்த நிலையில், தற்போது முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 15 ஆயிரத்து 11 மாணவர்களும், 18 ஆயிரத்து 586 மாணவிகளும் என ஒட்டுமொத்தமாக 33 ஆயிரத்து 597 பேர் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர். இது 98.10 சதவிகிதமாகும்.
குறிப்பாக, பாடப்பிரிவுகளைப் பொறுத்தவரையில் இயற்பியல் பாடத்தில் 96.63 சதவிகிதம், வேதியியல் பாடத்தில் 99.95 சதவிகிதம், உயிரியல் பாடத்தில் 97.64 சதவிகிதம், கணிதப் பாடத்தில் 98. 56 சதவிகிதம், தாவரவியலில் 93.78 சதவிகிதம், விலங்கியல் பாடப் பிரிவில் 94.5 53 சதவிகிதம், கணினி அறிவியலில் 99.25 சதவிகிதம், வணிகவியல் பாடத்தில் 96.44 சதவிகிதம், கணக்குப்பதிவியல் 98.16 சதவிகிதம் பேர் கோவை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications












